இன்று பொத்துவில் முதல் பொலிகண்டி வரை…

208

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான மூன்றாவது நாள் போராட்டம் வவுனியாவை வந்தடைந்த நிலையில் நிறைவுபெற்றுள்ளது.

திருகோணமலையில் இருந்து இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், முல்லைத்தீவுக்குச் சென்று புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், நெடுங்கேணி ஊடாக வவுனியாவை அடைந்துள்ளது.

இந்நிலையில், நாளையதினம் காலை 7.30 மணிக்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்து போராட்டம் மீண்டும் ஆரம்பமாகி மன்னார் மாவட்டம் நோக்கிப் பயணிக்கவுள்ளது.

முன்னதாக திருகோணமலையில் இருந்து ஆரம்பித்த பேரணி தடைகளை தாண்டி இன்று மதியம் முல்லைத்தீவு மாவட்டத்தை வந்தடைந்தது.

போராட்டக்காரர்களை வழிமறித்த முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றத் தடை உத்தரவினைக் காட்சிப்படுத்திய போதிலும் போராட்டக்காரர்கள் அவற்றைப் பொருட்படுத்தாது தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அத்துடன், நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பிள்ளையார் கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

அத்துடன், உடுப்புக் குளம் பகுதியில் கூடியிருந்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவான மக்களையும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து அங்கும் ஒரு கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு சிலாவத்தைச் சந்தியை அண்டிய பகுதிகளும் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன் அங்கும் பெருமளவான மக்கள் போராட்டத்துடன் இணைந்து தமது ஆதரவினை வழங்கியருந்தனர்.

இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நகரப் பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம் மாவட்டச் செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டதுடன் அங்கிருந்து வாகனங்களில் வட்டுவாகல் பாலம் ஊடாக கோட்டாபய கடற்படைத்தளம் வரையில் பலத்த கோஷங்களுக்கு மத்தியில் பேரணி சென்றது.

இதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்குச் சென்று அங்கு நினைவுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்காக முள்ளிவாய்க்கால் பூமியிலிருந்து மண் சேகரிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு நகர் மற்றும் ஒட்டுசுட்டான் ஊடாகப் பயணித்த பேரணியானது தற்போது நெடுங்கேணி நகரை அடைந்தது.

அதனையடுத்து வவுனியா நகருக்குள் வந்தடைந்த பேரணி மாவட்ட செயலகத்தின் முன்னாள் கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *