முக்கிய செய்திகள்

இன்று முழு அடைப்புப் போராட்டம்

124

வடக்கு, கிழக்கு பகுதிகளில் இன்று முழு அடைப்புப் போராட்டம் இடம்பெறவுள்ள நிலையில், இந்தப் போராட்டத்துக்கு  இரண்டு பிரதான முஸ்லிம் கட்சிகளும் முழு ஆதரவை வெளியிட்டுள்ளன.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதைக் கண்டித்து, வடக்கு, கிழக்கில் நாளை முழு அடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு முஸ்லிம் மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் சமூகங்களாக சிறிலங்காவின் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தோரை நினைவுகூரவும் நல்லடக்கம் செய்யவும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு மறுக்கப்படுகின்றன.

இவற்றுக்குப் பின்னால் ஆளும் வர்க்கத்தின் அதிகாரக் கெடுபிடிகள் இருப்பதை நாம் அறிவோம். இவ்வாறான செயற்பாடுகளை ஜனநாயக ரீதியில் எதிர்ப்பதற்கு சிறுபான்மையினர் ஒன்றுபட வேண்டும்.

சிறிலங்கா அரசினால் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர் என்ற உணர்வில், முஸ்லிம்கள் இந்த முழு அடைப்பை ஆதரிப்பது அவசியம்.” என தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வடக்கு, கிழக்கில்  முன்னெடுக்கப்படும் முழு அடைப்பு போராட்டத்துக்கு  முஸ்லிம் சமூகம் முழு ஆதரவையும் வழங்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கேட்டு கொண்டுள்ளது.

இதுதொடர்பில், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிஸாம் காரியப்பர், விடுத்துள்ள ஊடக அறிக்கையில், சிறுபான்மை சமூகத்தின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தி, அவமதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்து, வடக்கு, கிழக்கில் இடம்பெறவுள்ள முழு அடைப்புக்கு முஸ்லிம் சமூகம், முழு ஆதரவையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *