அரசாங்கத்தின் கட்டமைப்பு சார் இன அழிப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மறைமுகமாக ஒத்துழைப்பினை வழங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு அமைப்பாளர், தர்மலிங்கம் சுரேஷ் குற்றஞ்சாட்டினார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மட்டக்களப்பு மயிலந்தனை மேச்சல்தரை விவகாரம் தொடர்பாக பிரபல சட்டத்தரணி இரத்தினவேலினால் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சாணக்கியன் ஆகியோர் மக்களை ஏமாற்றுவதற்காக வழக்கு தொடரப் போவதாக அறிவித்து மீண்டும் ஒரு கபட நாடகத்தை நடாத்தியுள்ளனர்.
மயிலத்தனைமடு மேச்சல்தரை பிரச்சினை பாரிய பிரச்சினை. இந்த பகுதியில் அவர்கள் கால்நடைகளை நீண்டகாலமாக மேய்க்கமுடியாமல் சிங்கள மக்களால் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படுகின்றனர். கடந்த நல்லாட்சி காலத்தில் இது தொடர்பான பிரச்சினைகள் அதிகபடியாக இடம்பெற்றன.
அப்போது பண்ணையாளர்களால் அது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் முறையிட்டும்கூட அவர்கள் இழுபறிபோக்கை கடைப்பிடித்து வந்ததுடன், அந்த மக்களின் வாழ்வாதாரம் தொடர்பாகவோ பிரச்சினை தொடர்பாகவோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.