இரணைமடுவிலிருந்து வீணாகும் 60 சதவீதமான நீரை, யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்வதற்கான திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பரிந்துரை

342

இரணைமடுவிலிருந்து வீணாகும் 60 சதவீதமான நீரை, யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்வதற்கான திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
இரணைமடு நீர்த்தேக்கம் மற்றும் நீர்த்தேக்க செயற்றிட்ட அலுவலகத்துக்கு, இன்று (18) திடீர் விஜயம் மேற்கொண்ட அவர், நிலைமைகளை ஆரய்ந்தார்.
கடந்த 10ஆம் திகதி, கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அவர், இரணைமடு நீர்த்தேக்கத்துக்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், வான்கதவுகளின் திருத்தப்பணிகள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள, சம்பந்தப்பட்டவர்களுக்கு பணிப்புரைகளை வழங்கியிருந்தார்.
இந்நிலையில், அது தொடர்பிலான முன்னேற்றங்கள் குறித்து ஆராயும் நோக்கிலேயே, இன்று திடீர் கண்காணிப்பு விஜயத்தை அவர் மேற்கொண்டார்.
இரணைமடு நீர்த்தேக்கத்தின் 14 வான்கதவுகளில், ஏழு வான்கதவுகளில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து, இரணைமடு நீர்த்தேக்கத்தை முழுமையாக ஜனவரி 31ஆம் திகதி கையளிக்க, நீர்த்தேக்கத்தை புனரமைப்பு செய்த தனியார் நிறுவனம் உறுதியளித்துள்ளதுடன், பெப்ரவரி முதல் தொடர்ச்சியாக 06 மாதங்களுக்கு, தன்னார்வ ரீதியான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவற்கும் முன்வந்துள்ளது.
இதேவேளை தற்போது இரணைமடு நீர்த்தேக்கத்தின் 40 சமவீதமான நீர் மட்டுமே விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதுடன், 60 சதவீதமான நீர், சமுத்திரத்தை சென்றடைவதாக கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரும் இரணைமடு நீர்த்தேக்க செயற்றிட்டத்தின் செயற்றிட்ட பணிப்பாளருமாகிய பொறியியலாளர் என்.சுதாகரன் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
அதனையடுத்து வீணாக சமுத்திரத்துக்கு செல்லும் 60 சதவீதமான நீரை, யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவருவதற்கான விசேட செயற்றிட்ட முன்மொழிவை, கூடியவிரைவில் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்ட ஆளுநர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இதுதொடர்பில் கலந்தாலோசித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *