முக்கிய செய்திகள்

இரண்டு மீனவர்களின் சடலங்கள் மீட்பு

118

நெடுந்தீவு கடற்பரப்பில், சிறிலங்கா கடற்படை படகு மோதி மூழ்கடிக்கப்பட்ட இந்திய மீன்பிடிப் படகில் இருந்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

நேற்று இரண்டாவது நாளாக நடத்தப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு பணியின் போது, படகு மூழ்கிய இடம் கண்டறியப்பட்டதுடன், படகினுள் இருந்து சுழியோடிகள் மூலம், இரண்டு மீனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக, சிறிலங்கா கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த படகில் நான்கு பேர் இருந்திருக்கலாம் என சிறிலங்கா கடற்படை சந்தேகிக்கின்ற நிலையில், இருவரின் சடலங்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன.

காணாமல் போயுள்ள ஏனைய இரண்டு மீனவர்களை தேடும் பணிகள் இடம்பெறுவதாகவும்  கப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மீட்கப்பட்ட மீனவர்களின் சடலங்கள் நேற்று யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைப்படைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட ஒரு சடலம் குருநகரை சேர்ந்த 28 வயதுடைய சாம்சன் டார்வின் என்ற மீனவருடையதாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இவர் தமிழகத்தில் அகதியாக தஞ்சமடைந்து, மண்டபம் முகாமில் தங்கியிருப்பவர் என்றும், மீன்பிடிப் படகில் பணியாற்றிய போதே இந்தச் சம்பவத்தில்  உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *