இராணுவ கைக்கூலிகளிடமிருந்து ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி மகஜர்.!

354

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோருக்கு மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் நேற்று ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டமையை கண்டித்து, யாழ். ஊடக அமையத்தினால் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”யுத்த நெருக்கடி மிக்க காலப்பகுதிகளில் வட- கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் கட்டவிழ்த்து விடப்பட்ட ஊடக அடக்குமுறைகளால் 39 வரையிலான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டும் இருந்தனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்நிலைமை மாற்றமடைந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போதைய சம்பவங்கள் அதன் உண்மைத்தன்மையினை கேள்விக்குள்ளாக்கி வருகின்றது.

கிளிநொச்சியில் நேற்று பகிரங்க வெளியில் ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலுக்கு யாழ். ஊடக அமையம் மன வருத்தத்துடன் கண்டனத்தை பதிவு செய்ய விரும்புகின்றது.
கடந்த ஆட்சி காலங்களில் நடந்தது போன்று கடத்தல்கள், காணாமல் போதல்கள், கொலைகள் மீண்டும் அரங்கேறலாம் என்ற அச்சம் ஊடகவியலாளர்கள் மத்தியில் தோற்றம் பெற்றுள்ளது.

இத்தகைய சூழலில் ஊடகவியலாளர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன் குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்துமாறு கோரி நிற்கின்றோம்.

இதன்மூலம் தமக்கு நீதி கோரி ஊடகவியலாளர்கள் வீதிக்கு இறங்குவதை தடுக்க முடியுமென நம்புகின்றோம்.
அதேவேளை குற்றவாளிகளை அடையாளப்படுத்த பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தயராக உள்ளார்கள் என்பதையும் அறியத்தர விரும்புகின்றோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *