இர்மா புயல் நிவாரண உதவி: $150,000 வழங்குகிறது ஒன்ராறியோ மாநில அரசு

973

இர்மா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நிவாரண உதவி நடவடிக்கைகளுக்காக ஒன்ராறியோ மாநில அரசாங்கம் ஒன்ரை இலட்சம் டொலர்களை கனேடிய செஞ்சிலுவைச் சங்கத்திக்கு வழங்கவுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின், மிகவும் மோசமான, பயங்கரமான ஒரு கனவு இலட்சக் கணக்கான மக்களுக்கு நனவான நிகழ்வாக இந்த இர்மா புயல் அனர்த்தம் சம்பவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த புயலில் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமது அனுதாபத்தையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் கடிதம் ஒன்றினை ஃபுளோரிடா ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் புயல் காரணமாக பலமில்லியன் ஃபுளோரிடா மக்கள் மின் வினியோகத்தினை இழந்துள்ள நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் ஹெட்ரோ வண் ஊழியர்களும் திருத்த வேலைகளுக்கான பெருமளவு மின்சார சாதனங்களும் ஃபுளோரிடாவுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி இந்த பேரிடரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தம்மாலான உதவிகளை வழங்கத் தயாராக உள்ளோம் என்ற செய்தியையும் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று செவ்வாய்கிழமை வரையிலான நிலவரப்படி, இந்த புயல் காரணமாக கரீபியல் தீவுகளில் 37 பேரும், ஃபுளோரிடா, ஜோர்ஜியா, தென் கரோலினா ஆகிய இடங்களில் 18 பேரும் பலியாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு்ளளது.

இவ்வாறான நிலையில் இந்த புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் ஒன்ராறியோ மக்களின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களையும், அரவணைப்பையும் பகிர்ந்து கொள்வதாகவும் முதல்வர் கத்தலின் வின் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *