இலங்கைத் தமிழர்களுக்கு அனைத்துல சமூகம் துரோகமிழைக்கிறது என்று கெலும் மக்ரே குற்றஞ்சாட்டியுள்ளார்

602

இனப்படுகொலைப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் மக்களுக்கு அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அனைத்துலக சமூகம் தவறியுள்ளதாகவும், அதன் மூலம் அனைத்துலகம் அந்த மக்களுக்கு துரோகம் இழைத்து வருகின்றது எனவும் பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளரும், சனல்4 ஆவணப் படத்தின் இயக்குனருமான கெலும் மக்ரே குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிறிலங்கா படையினர் மீதான போர்க்குற்றச்சாட்டுக்களை நீக்கிக்கொள்ளுமாறு எதிர்வரும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரின்போது யோசனையொன்றை முன்வைக்கவுள்ளதுடன், பின்னர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா அமர்வின்போது இந்த யோசனையைப் பிரேரணையாகக் கொண்டுவரத் தாங்கள் திட்டமிட்டுள்ளதாக இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய கருத்துக்கள் தொடர்பாக கீச்சகத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே மக்ரே இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதிலே மிகவும் மோசமான விடயம் யாதெனில், இதற்குப் பின்னரும் கூட இலங்கையின் முன்னேற்றம் தொடர்பாக தாங்கள் உற்சாகமடைந்துள்ளோம் என்ற பல்லவியைப் பாடுவதை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட தரப்புகள் மாற்றிக்கொள்ளாமல் உள்ளதே என்றும், இலங்கை அரசு நீதியை ஒருபோதும் வழங்கமாட்டாது என்ற விடயத்தைத் தான் தமிழ் மக்கள் தொடர்ந்தும் கூறி வந்துள்ளனர் என்பதையும், மனித உரிமை ஆர்வலர் மரியோ அருள் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கருத்தினை மேற்கோள் காட்டி தனது கீச்சகப் பதிவிலே கருத்து தெரிவித்துள்ள கெலும் மக்ரே, அனைத்துலக சமூகம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு வழங்கிய தனது சொந்த வாக்குறுதிகளுக்கு துரோகமிழைத்து வருகின்றது எனவும், இலங்கையில் நீதிக்குத் தொடர்ந்தும் துரோகமிழைக்கப்படுகின்றது என்றும் தெரிவித்து்ளளார்.

இந்த நிலையில் இலங்கை சனாதிபதியின் கருத்துக்கள் அனைத்துலக மனித உரிமை செயற்பாட்டாளர்களிடையே அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக இலங்கை சனாதிபதி மைத்திரிபாலவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று யஸ்மின் சூக்காவின் உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக அமைப்பும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *