முக்கிய செய்திகள்

இலங்கையின் சுதந்திர நாள் அன்று யாழ் மாவட்டத்தில் கறுப்பு பட்டிப் போராட்டத்திற்கு அழைப்பு

1064

வவுனியா மாவட்டத்தின் சரித்திரத்தில் முதல் முறையாக சிறிலங்கா முப்படையினர் மற்றும் காவல்த்துறையினர் உள்ளடக்கிய அணிவகுப்புடனான சுதந்திரதினக் கொண்டாட்ட நிகழ்விற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இலங்கையின் 69வது சுதந்திர நாள் கொண்டாட்டம் இந்த ஆண்டு கொழும்பிற்கு அடுத்த படியாக முப்படையினர் , காவல்த்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர் ஆகியோரின் அணிவகுப்புக்களுடன் வவுனியா நகர சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இவ்வாறு இடம்பெறவுள்ள சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் வட மாகாண ஆளுநர் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த கொண்டாட்ட நிகழ்வுகளிற்கான ஏற்பாடுகள் நேற்றுமுதல் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

வவுனியா மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த நிகழ்வின்போது, கொழும்பில் இடம்பெறும் பிரதான நிகழ்வில் மைத்திரிபால சிறிசேனா ஆற்றும் உரையினையும் நேரடி ஒளிபரப்புச் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து, இலங்கையின் 69வது சுதந்திர நாளான நாளை மறுநாள் சனிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக கறுப்புப் பட்டி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சனிக்கிழமை இலங்கையின் 69வது சுதந்திர நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், காணாமல் போனவர்கள் விடயத்துக்கு பதில் கூறுமாறும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிக்க வலியுறுத்தியும், மீண்டும் காணிகள் சுவீகரிக்கப்படக் கூடாது எனக் கோரியும், இனப்படுகொலைக்கு நீதி மற்றும் அனைத்துலக விசாரணை போன்ற கோரிக்கைகளை முன்வைத்தும் காலை 8 மணிமுதல் 10 மணிவரை அமைதியான போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அதேவேளை தற்போதை ஆட்சியிலும் யாழ்ப்பாணத்தில் 1,505 எக்கர் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் காணிகளை சிறிலங்கா இராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் காவல்த்துறைக்கு ஒதுக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த விடயம் ரகசியமாக செய்யப்பட்ட விடயம் என்றும், இப்போது வடமாகாண சபைக்கு தெரியவந்துள்ளது என்றும் கூறியுள்ள அவர், இதற்காக காணி ஆணைக்குழுவின் முன்னாள் இணைப்பாளரும், தற்போது பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளருமான ராஜபக்ச இம் மாதம் 09 ஆம் நாள் யாழ் மாவட்டத்திற்கு வருகை தர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *