இலங்கையில் இன்னமும் சித்திரவதைகள் தொடர்வதனை ஐக்கிய நாடுக்ள அமைப்பு மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது

1096

இலங்கையில் சித்திரவதைகளுக்கு ஆளாகக்கூடிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள, வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஈழத் தமிழர்களை நாடு கடத்த வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் சபை வெளிநாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதத்திலும் வெள்ளைவான் கடத்தல்கள் இடம்பெற்றுள்ளதாக ஆதாரங்களுடன் தகவல்களை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு, இலங்கையின் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் காவல்த்துறை உட்பட சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக விமர்சித்து நீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தற்போதைய ரணில் – மைத்ரி அரசாங்கத்திலும் வெள்ளை வான் கடத்தல்கள் மாத்திரமன்றி, கைது செய்யப்படுபவர்கள் பாலியல் ரீதியிலான வன்கொடுமைகளுக்கும் உட்படுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகள் தொடர்பான குழு வெளியிட்டுள்ள 24 பக்கங்களைக் கொண்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படைத்தரப்பினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடடமைப்பு ரீதியான விசாரணை செய்வதற்கு முடியாமை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் சுயாதீன நிறுவனமாக இயங்காமை ஆகிய விடயங்கள் நீதியை நிலை நாட்டுவதற்கு பெரும் தடையாக இருப்பதாகவும் ஐ.நா குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் தற்போதைய சட்ட கட்டமைப்பு, இராணுவம் உட்பட முப்படையினர், காவல்த்துறையினர், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றை மறுசீரமைப்புக்கு உட்படுத்தாமையால் சித்திரவதைகள் தொடரக்கூடிய ஆபத்து நீடித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் உடல் மற்றும் உள ரீதியான சித்திரவதைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கும் ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் தலைவரான பேராசிரியர் ஜுவான் மெந்தெஸ், இவை தொடர்பில் விசாரணை நடத்தாமை குறித்தும் விசனம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் சித்திரவதைகளுக்கு உட்படுத்தி பெற்றுக்கொள்ளும் ஒப்புதல் வாக்குமூலங்களை எந்தவித கேள்விக்கும் உட்படுத்தாது அப்படியே சாட்சியாக ஏற்றுக்கொள்ளும் நீதிமன்றத்தின் நடைமுறையை வன்மையாகக் கண்டித்துள்ள அவர், இந்த நடவடிக்கைகள் சித்திரவதைகளை தொடர்ந்தும் ஊக்குவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சித்திரவதைகளுக்கு துணையாக இருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறு வலியுறுத்தியுள்ள ஐ.நா அதிகாரி, அதற்குப் பதிலாக கொண்டுவரப்படவுள்ள உத்தேச சட்டமூலம் அனைத்துலக விதிமுறைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சித்திரவதைகள் தொடர்பில் விசாரணைகளை நடாத்தி, வழக்குத் தொடர்ந்து, தண்டனை பெற்றுக்கொடுப்பதற்காக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை உண்மையான அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கத்தை ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் தலைவர் யுவான் மெந்தெஸ் வலியுறுத்தியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *