முக்கிய செய்திகள்

இலங்கையில் நிரந்தரமான அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு தனது முழுமையான பங்களிப்பு இருக்கும் என்று பொதுநலவாய அமைப்பின் செயலாளரிடம் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்

607

இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், மக்கள் மத்தியில் முழுமையான அமைதியும், சமாதானமும் ஏற்படவில்லை என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்ட் இன்று எதிர்க்கட்சித் தலைவரின் பணியகத்தில் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியபோதே சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும், மக்கள், குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புகள் காணப்பட்டன எனவும், இலங்கை அரசாங்கம் அனைத்துலக மட்டத்திலும் நாட்டு மக்களுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமென அவர்கள் எதிர்பார்த்தார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிராந்தியங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் அரசாங்கக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு புதிய அரசியல் யாப்பு, உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுதல், நட்டஈடு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள், படையினர் கைவசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு, மிகக் கடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விடுதலை போன்றன அவ்வாறான வாக்குறுதிகளில் சிலவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இவை தொடர்பில் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை எனவும், புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதிலும் இத்தகைய நிலையே காணப்படுகிறது என்றும், புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் பிரேரணையானது, நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட போதிலும், ஒரு சில அரசியல் காரணங்களினால், இதனை முன்னெடுத்துச் செல்வதில் அரசாங்கத் தரப்பில் தாமதங்கள் காணப்படுகின்றன என்றும் அவர் விபரித்துள்ளார்.

நாடு பாரிய போர் ஒன்றுக்கு முகம் கொடுத்தமைக்குக் காரணங்கள் உள்ளன எனவும், ஒருவர் உறுதியாக இல்லாதவிடத்து இந்தப்பிரச்சினையைக் கையாள முடியாது என்றும், கடும் போக்காளர்களின் நடவடிக்கைகளுக்கு அஞ்சி, இவற்றை ஒருவர் கைவிட முடியாது என்றும் தெரிவித்துளள அவர், இலங்கை அரசாங்கமானது உறுதியாக நின்று நாட்டைச் சரியான பாதையில் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

புதிய அரசியல் யாப்பின் உருவாக்கமானது நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்லும் மிகப்பாரிய ஒரு செயல் எனவும், இலங்கையில் நிரந்தரமான அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு, தனது முழுமையான பங்களிப்பு இருக்கும் என்றும் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலர், இலங்கையில் சனநாயக மேம்பாடு, சட்ட ஒழுங்கு, நல்லாட்சி மற்றும் சூழல் மாசடைதலைத் தவிர்த்தல் உள்ளடங்கலான பல விடயங்களில் பொதுநலவாய நாடுகள் செயலகம் பங்களிப்பு வழங்குகிறது எனவும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கும் பொதுநலவாய நாடுகள் பணியகம், தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கும் என்றும் கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *