முக்கிய செய்திகள்

இலங்கையில் யார் சனாதிபதியாக இருந்தாலும் தானே அரசாங்கத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பேன் என்று பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்

564

தெற்கில் பொதுமக்களின் கை, கால்களை உடைத்த இராணுவத்தினர் வடக்கில் நடைபெற்ற போரின் போதும் இப்படிதான் நடந்து கொண்டிருப்பார்கள் என்று எண்ண தோற்றுவதாக இலங்கையின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பல குறைப்பாடுகள் நடந்தன எனவும், இந்த குறைப்பாடுகள் சிறீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.

கம்பஹா, ரத்துபேருந்துவல சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டனர் எனவும், தமது கட்சி கிளைகளை சேர்ந்த 21 பேரின் கால்களில் துப்பாக்கிச்சூட்டு காயங்கள் ஏற்பட்டன என்றும், இதனை பார்க்கும் போது இவர்கள் வடக்கிலும் இப்படிதான் கொலை செய்திருப்பார்கள் என்று தனக்கும் எண்ண தோன்றுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது மிகவும் மனிதாபிமானமற்ற செயல் எனவும், ரத்துபேருந்துவல ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தவும், அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தவும் யார் ஆணையிட்டது என்பது தற்போதும் கேள்விக்குரியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்து்ளளார்.

நடந்த இந்த சம்பவத்திற்காக ரத்துபேருந்துவல கிராமத்திற்கு சென்று மன்னிப்பு கோரியதாகவும், திருத்திக்கொள்ள வேண்டிய தவறுகள் இருக்கும் போது, அவற்றை திருத்திக்கொள்ளாமல், வெற்றி பெறுவோம் என்று முட்டாள்கள் போல் கூறிக்கொண்டு, இறுதியில் தோல்வியை தழுவ வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டியது முன்னாள் சனாதிபதியின் பொறுப்பு எனவும், எனினும் யார் சனாதிபதியாக பதவிக்கு வந்தாலும் தானே அரசாங்கத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை மக்களிடம் உள்ள எதிர்ப்பை சரி செய்து, அவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளாமல் சனாதிபதித் தேர்தலில் வெற்றியை எதிர்ப்பார்க்க முடியாது எனவும் பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *