முக்கிய செய்திகள்

இலங்கையுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்தவுள்ளதாகவும், போர்க்கப்பல் ஒன்றை கொடையாக வழங்கவுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது

329

இலங்கையுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்தவுள்ளதாகவும், இலங்கை கடற்படைக்கு போர்க்கப்பல் ஒன்றை கொடையாக வழங்கவுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 91 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கொழும்பில் உள்ள ஷங்ரி லா விடுதியில் நேற்று நடந்த நிகழ்வில், சீனத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சூ ஜியான்வெய் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய சீனத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சூ ஜியான்வெய், இந்த ஆண்டு இலங்கையின் முப்படையினருக்கும் சீனா பல்வேறு பயிற்சிநெறிகளையும் தொடர்ந்து வழங்கியது எனவும், சிறிலங்கா இராணுவ பயிற்சிக் கல்லூரியில் சீனாவின் உதவியுடன் அரங்க வளாகம் கட்டப்பட்டு வருவதாகவும், சிறிலங்கா கடற்படைக்கு போர்க்கப்பல் ஒன்று கொடையாக வழங்கப்படவுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இலங்கையுடன் பரஸ்பரம் மூலோபாய நம்பிக்கையை வலுப்படுத்த சீனா விரும்புகிறது எனவும், முக்கியமான நலன்கள் சார்ந்த பிரச்சினைகளின் போது இரண்டு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று தொடர்ந்து ஆதரவுடன் செயற்படுவதைக் காண சீனா அக்கறை கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாடுகள் மற்றும் இராணுவங்களுக்கு இடையில், நடைமுறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, அணை மற்றும் சாலைத் திட்டத்தின் அபிவிருத்தியைப் பலப்படுத்த சீனா விருப்பம் கொண்டுள்ளது எனவும், ஒரு நல்ல மற்றும் உண்மையான நண்பன் என்ற வகையில், கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இலங்கைவின் சமூக- பொருளாதார அபிவிருத்தி மற்றும் இராணுவ, பாதுகாப்பு கட்டுமானங்களுக்காக சீனா தொடர்ந்து வலுவான ஆதரவை வழங்கியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் இரண்டு இராணுவங்களும், பயிற்சி, கூட்டுப் பயிற்சி, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் ஆழமான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன என்றும் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *