முக்கிய செய்திகள்

இலங்கையுடன் இராணுவ விநியோக உடன்பாட்டைப் புதுப்பித்துக் கொள்வதற்கு அமெரிக்கா விருப்பம்

1172

இலங்கையுடன் செய்து கொண்ட இராணுவ விநியோக உடன்பாட்டைப் புதுப்பித்துக் கொள்வதற்கு அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும் அப்போதைய அமெரிக்கத் தூதுவருக்கும் இடையில் 2007ஆம் ஆண்டு, கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு – சேவைகள் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது.

பரிமாற்றம் மற்றும் விநியோக பரிமாற்றங்கள், உதவி, மற்றும் எரிபொருள் விநியோக சேவைகளை வழங்குவதற்கு வசதிகளை செய்யும் இந்த உடன்பாடு, 10 ஆண்டுகளுக்கே செல்லுபடியாகும் என்ற நிலையில், இந்த உடன்பாட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு அமெரிக்கா விருப்பம் கொண்டுள்ளதாக அமெரிக்க பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருந்த 2002-2003 காலப்பகுதியில் அமெரிக்கா- இலங்கை இடையில் இந்த உடன்பாட்டை செய்து கொள்வதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்ட போதிலும், இறுதி இணக்கம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் 2007ஆம் ஆண்டிலேயே இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டதாகவும், இந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டமை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் உதவிகள் இலங்கைக்கு கிடைப்பதற்கு வழிவகுத்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இறுதிக்கட்டப் போரின் போது, 2007ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் நான்கு ஆயுதக் கப்பல்கள் ஆழ்கடலில் மூழ்கடிப்பதற்குத் தேவையான புலனாய்வுத் தகவல்களை அமெரிக்காவே வழங்கியிருந்ததுடன், இலங்கை கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகுகளில் பொருத்துவதற்கு 30 புஸ்மாஸ்டர் பீரங்கிகளையும் அமெரிக்கா வழங்கியிருந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் விமான எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொள்வனவு செய்யும் விடுதலைப் புலிகளின் முயற்சிகளையும் அமெரிக்கா தடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *