இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் முரண்பாடு

1010

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளதையே, சனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று ஆற்றிய உரை அம்பலப்படுத்தி உள்ளதாக ஊழல் மோசடிகளுக்கு எதிரான முன்னணி தெரிவித்துள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் படைத் தளபதிகள் மற்றும் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் ஆகியோரை விசாரணைக்கு உட்படுத்தி வருவது தொடர்பில் கடும் கண்டனத்தை தெரிவித்த சனாதிபதியின் உரையை கேட்டு தாம் அதிர்ச்சி அடைந்து விட்டதாக ஊழல் மோசடிக்கு எதிரான முன்னணியின் ஆலோசகர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்தால் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தப்பட்ட நட்டம், அங்கு இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவரும், நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததாக ஊழல் மோசடிகளுக்கு எதிரான முன்னணியின் ஆலோசகர் ரஜித் கீர்த்தி தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

படைத் தளபதிகள் போரை வெற்றிபெறுவதற்கு முக்கிய பங்காற்றினர் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை என்ற போதிலும், போரின் பின்னர் அவர்கள் வேறு பதவிகளில் இருந்துகொண்டு நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு முரணாக செயற்பட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என்றும், அதனை எவரும் விமர்சிக்க முடியாது என்றும் விளக்கமளித்துள்ளார்.

காவல்துறை நிதி மோசடிப் பிரிவினர் தமக்குரிய சட்ட வரையரைகளுக்கு அமையவே இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தாம் நம்புவதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள தரப்பினர்களிடையே ஒரு தரப்பினர் மீது மாத்திரம் விசாரணைகள் இடம்பெறுவதை காணக் கிடைப்பதாகவும் கூறிய தென்கோன், மற்றைய தரப்பினர் அரசியல் உறவுகளுக்காக விசாரணைகளிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறிகள் கொடுக்கல் வாங்கலின் போது நிகழ்ந்த பாரிய மோசடிகள் தொடர்பில் இதுவரை விசாரணைகள் இடம்பெறாமை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் சிலர் நீண்டகாலமாக சிறை வைக்கப்பட்டுள்ளது தொடர்பில் சனாதிபதி தனது அதிருப்தியை வெளியிட்டது குறித்தும் கருத்துத் தெரிவித்த கீர்த்தி தென்னகோன், அவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதனாலேயே அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியில் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *