முக்கிய செய்திகள்

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்

453

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூரில் இடம்பெறும் ஆறாவது அனைத்துலக நகர மாநாடு மற்றும் அதனுடன் இணைந்தவாறு இடம்பெறும் சிங்கப்பூர் அனைத்துலக நீர் வார நிகழ்வு, தூய்மையான சூழல் மாநாடு ஆகிய மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சிங்கப்பூர் நோக்கிப் பயணிக்கவுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் இந்த பயணத்தின்போது சிங்கப்பூர் பிரதமர் லீ சின் லுங் , பிரதிப் பிரதமர் மற்றும் பொருளாதார, சமூகக் கொள்கைகள் தொடர்பான ஒருங்கிணைப்பு அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் , சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் கோ சொ தோங் உள்ளிட்ட சிங்கப்பூர் அரசாங்கத்தின் உயர் மட்ட அமைச்சர்கள் பலரை சந்திக்கவுள்ளார்.

எதிர்வரும் 09 ஆம் நாள் அனைத்துலக நகர மாநாட்டின் ஆரம்ப அமர்வில் ‘நகர அபிவிருத்தி மற்றும் சூழலைப் பாதுகாத்தல்’ எனும் தலைப்பில் பிரதான உரையை ரணில் விக்கிரமசிங்க நிகழ்த்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை மாநாட்டின் கருப்பொருள் ‘புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பு ஊடாக எதிர்காலத்திற்குப் பொருத்தமான நிலைபேறான நகரங்களை உருவாக்குதல்’ என்பதுடன், முறையான நிர்வாகம் மற்றும் திட்டமிடல், தொழிநுட்பம் மற்றும் சமூகப் புதிய உற்பத்திகள், ஏனைய நகர மற்றும் பங்காளர்களுடன் முறையான தொடர்புகளைக் கட்டியெழுப்புவதன் மூலம் வாழ்வதற்குப் பொருத்தமான நகரங்களை உருவாக்கிக் கொள்வது தொடர்பாக இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பேராசிரியர் மைத்திரீ விக்கிரமசிங்க, இலங்கையின் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ, அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, கனிய வளங்கள் அபிவிருத்திப் பிரதியமைச்சர் அனோமா கமகே அவர்கள் ஆகியோரும் இந்த சிங்கப்பூர் பயணத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *