முக்கிய செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை முடிவுகளை சனாதிபதிக்கு அறிவிக்க வேண்டிய தேவையில்லை

1127

தாம் முன்னெடுக்கும் விசாரணைகளின் முடிவுகளை  சனாதிபதிக்கு அறிவித்து, ஆலோசனையோ அல்லது ஏனைய தீர்மானங்களையோ பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்ட ரீதியிலான கட்டுப்பாடு இல்லை என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நேற்று அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் கையெழுத்துடன் இந்தக் கடிதம் சனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் சில நாட்களின் முன்னர்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது, குற்றப் புலனாய்வுப் பிரிவு, காவல்த்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகியன அரசியல் நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதற்கும் அதிருப்தி வெளியிட்டதுடன்,, விசாரணைக் குழுக்கள் தம்மிடம் தெளிவுபடுத்தாமல் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.

இந்த நிலையிலேயே தமது விசாரணை முடிவுகளை சனாதிபதிக்கு அறிவிக்க வேண்டிய தேவையில்லை என்பதை தெளிவுபடுத்தி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சனாதிபதிக்கு இந்தக் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளது.

இதேவேளை ரக்னா லங்கா, அவன்கார்ட் நிறுவனங்கள் உள்ளிட்ட மூன்று பாரிய நிதி மோசடிகள் குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் சனாதிபதி ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கைகளை அடுத்த வாரமளவில் சனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் சனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர்  குணதாச தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *