முக்கிய செய்திகள்

இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களை சிறிலங்காஅரசாங்கம் தகர்த்துள்ளது; சுமந்திரன்

250

இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களை சிறிலங்கா அரசாங்கம் தகர்த்துள்ளது என்று கூறியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை எவராலும் தடுக்க முடியாதபடி செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

“முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டதைத் தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.

இந்தச் செயலானது வெறுமனே கல்லிலான ஒரு தூபியை மட்டும் உடைக்கவில்லை; இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களைத் தகர்த்திருக்கிறது.

மரணித்தவர்களின் நினைவுத் தூபியை உடைப்பதென்பது அநாகரிகத்தின் உச்சக் கட்டம்.

போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு எவரும் தடை விதிக்க முடியாது.

அந்த நினைவுகளை எந்த உத்தரவும் மழுங்கடிக்கவும் முடியாது. நாம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைச் செய்வோம் – எவராலும் தடுக்க முடியாதபடி செய்வோம்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை உடைத்து நினைவுக்கல்லை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளமையானது இன்னுமொரு இனப்படுகொலைக்கு நிகரானதென தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

“மரணித்தவர்களை நினைவு கூருவது என்பது அடிப்படை உரிமையாகும் என சிறிலங்கா அரசியலமைப்பில் மட்டுமன்றி  ஐக்கிய நாடுகள் சபையின் சட்டங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனாலும் அடிப்படை உரிமையை  தடுத்து நிறுத்தும் செயற்பாடுகளே தற்போது அரங்கேறுகின்றது.” என்றும் அவர் கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *