முக்கிய செய்திகள்

இஸ்தான்புல் மகளிர் தின பேரணியில் காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர்.

285

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அன்று துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டு பேரணி நடத்தினர்.

அரசு அனுமதியின்றி நடைபெற்ற இந்த பேரணியை கலைக்க இஸ்தான்புல் காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர்.

துருக்கியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுக்க அதிபர் ரெசிப் தாயிப் எர்டோகன் தலைமையிலான அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெண்கள் நல ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

கடந்த 2018ம் ஆண்டு மட்டும் பெண்களுக்கு எதிரான வன்முறையில் 440 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக பெண்கள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த சர்வதேச மகளிர் தினமான நேற்று பெரும் பேரணி நடத்த மகளிர் அமைப்புகள் திட்டமிட்டிருந்தன.

கடந்த ஆண்டும் மகளிர் தினத்தன்று ஆயிரக்கணக்கான பெண்கள் இஸ்தான்புல்லில் அமைதியாக பேரணி நடத்தினர். அதேப்போல் இந்த ஆண்டும் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில் திடீரென்று அதிகாரிகள் நகரத்தில் மகளிர் பேரணி நடத்த தடை விதித்தனர்.

இருப்பினும் ஆயிரக்கணக்கான பெண்கள் பேரணிக்காக நகரின் மையத்தில் திரண்டனர். அதற்கு முன்பாகவே அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டன, கடைகள் மூடப்பட்டன.

காவல்துறையினரின் கட்டுப்பாட்டையும் மீறி பேரணி நடத்திய பெண்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். நாய்களை பேரணியில் வந்த பெண்கள் மீது ஏவிவிட்டு அவர்களை விரட்டினர்.. அதன் காரணமாக பல பெண்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். அருகில் இருந்த சந்துகள் வழியே அவர்கள் தப்பி வெளியேறினார்கள்.

பேரணியில் கலந்து கொண்ட பெண்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு பெண்கள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

துருக்கி தலைநகர் அங்காராவிலும் நேற்று நூற்றுக்கணக்கான பெண்கள் பேரணி நடத்தினர். ‘‘ஆண்கள் கொலை செய்கிறார்கள். அந்த கொலையாளிகளை அரசு பாதுகாக்கிறது’’ என்று முழக்கமிட்டபடி பெண்கள் பேரணி நடத்தினர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *