முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஈகோ எனப்படும் தற்பெருமை கொள்ளலாமா?

1532

இந்த சமுதாயத்தில் வாழ்வதற்கு ஏற்ற நல்ல நிலையில் ஒருவர் இருக்கிறாரா என்பதை மற்றவர் ‘மதிப்பீடு’ (Evaluation) செய்து, அதன் அடிப்படையில் வழங்கப்படும் மரியாதையை ‘மதிப்பு’ (Value) என குறிப்பிடுவார்கள்.

அதேபோல, ஒவ்வொரு பொருளும் சமுதாய தேவைக்கு ஏற்ற வகையில் அமைவதன் அடிப்படையில்தான் அதன் மதிப்பு கூடுகிறது அல்லது குறைகிறது.

ஒருவர் தன்னைப்பற்றி மிகவும் தாழ்வான முறையில் சிந்தித்து, ‘நான் ஒன்றுக்கும் உதவாதவன்’ என்று எண்ணிச் செயல்பட்டால், அவரிடம் ‘தாழ்வு மனப்பான்மை’ (Inferiority Complex) இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

அதேபோல், ஒருவர் தனது தகுதிக்குமீறி தன்னை மிகப்பெரியவராக மதிப்பீடுசெய்து செயல்பட்டால், அவரை ‘தற்பெருமை கொண்டவர்’ என இந்தச் சமுதாயம் முத்திரை குத்திவிடும்.

தன்னை மிகவும் தாழ்வாக எண்ணிக் கொள்வதும், மிக உயர்வாக எண்ணி ‘தற்பெருமை’ கொள்வதும் ஒரு மனிதருக்கு நிச்சயமாக பிரச்சினையை உருவாக்கும்.

பெரும்பாலும், வாழ்க்கையில் ‘நீயா? நானா?’ போட்டி ஏற்படுவதற்குக் காரணமாக ‘தற்பெருமை’ அமைந்துவிடுகிறது.

‘தற்பெருமை’ என்பதை ஆங்கிலத்தில் ‘ஈகோ’ என அழைப்பார்கள். தற்பெருமைக்கும், சுய மதிப்பிற்கும் (Self Esteem) இடையே வேறுபாடுகள் உள்ளன.

ஒருவர் தனது சுயமதிப்பை மிகவும் தேவைக்கு அதிகமாக உயர்வாகக் காட்டிக் கொள்வதை ‘தற்பெருமை’ என அழைப்பார்கள். இது பல எதிர் விளைவுகளையும் (Negative Effects) ஏற்படுத்திவிடும்.

ஒருவர் தன்னை மதிப்பிட்டு இயல்பான மதிப்புடன் கருதிக்கொள்வதை ‘சுய மதிப்பு’ என குறிப்பிடுவார்கள்.

இயல்பாக ஒருவர் சுய மதிப்புடன் செயல்படும்போது பிறருக்கும், அவருக்கும் பிரச்சினைகள் ஏற்படுவது குறையும்.

பொதுவாக, தற்பெருமை கொள்பவர்கள் தன்னை எல்லோரும் எப்போதும் மதிக்க வேண்டும் என்றும், முக்கியமானவராக கருத வேண்டும் என்றும் விரும்புவார்கள். இதனால், நம்பிக்கை இழந்தவர்களாகவும், தனது பெருமைகளைப் பற்றியே பேசிக்கொள்பவர்களாகவும் மற்றவர்கள் கண்களுக்கு இவர்கள் தெரிவார்கள்.

‘மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும்’ என ஒருவர் விரும்புவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், எப்போதும் தன்னை மற்றவர்கள் உயர்வாகக் கருதி துதி பாடி, பாராட்டிப் புகழ வேண்டும் என நினைப்பதால்தான், தற்பெருமை கொண்டவர்கள் நிம்மதி இழந்து காணப்படுகிறார்கள்.

‘ஈகோ’ எனப்படும் ‘தற்பெருமை’யோடு இருப்பவர்களை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்வது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

தற்பெருமை கொள்பவர்கள் பல நேரங்களில் வீண் பெருமை பேசுவார்கள். எப்போதும் பொறுமை இழந்தவர்களாக காணப்படுவார்கள். அடுத்தவர்களைப்பற்றி அடிக்கடி குறைசொல்லும் மனப்பாங்கோடு இருப்பார்கள். தான் செய்த தவறுக்கு தப்பித் தவறிக்கூட மன்னிப்பு கேட்கும் மனநிலை இல்லாதவர்களாக இருப்பார்கள். வீண் விவாதம் செய்வதை வாடிக்கையாக்கி மகிழ்வார்கள். அடுத்தவர்களிடம் சண்டை போடுவதை பொழுதுபோக்காக நினைப்பார்கள். மற்றவர்கள் தன்னை விமர்சிக்கும்போது, அதற்கு ஏதாவது பதில்சொல்லி, தான் நேர்மையுடன் இருப்பதாகக் காட்டிக்கொள்வார்கள். இத்தகைய குணம் கொண்டவர்களிடம் சற்று எச்சரிக்கை உணர்வோடு பழகுவது நல்லது.

தன்னை பெருமையோடு நினைப்பதும், தனது பெருமைகளை பிறரோடு ஆர்ப்பாட்டம் இல்லாமல் பகிர்ந்து கொள்வதும் ‘தற்பெருமை’ ஆகாது. ஆனால், அதேவேளையில், தன்னிடம் இல்லாத திறமையையும், தன்னிடம் இருப்பதாகக் காட்டிக்கொண்டு, மிகைப்படுத்தி வெளிப்படுத்தும்போது, ஒருவரின் ‘ஈகோ’ எனப்படும் ‘தற்பெருமை’ குணத்தை மற்றவர்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்வார்கள்.

ஒருவரிடம் ‘ஈகோ’ எனப்படும் ‘தற்பெருமை’ குணம் எப்படி உருவாகிறது என்பதைத் தெரிந்து கொள்வது நல்லது.

‘தற்பெருமை’ என்னும் குணம் ஒருவரிடம் தானாக வருவதில்லை. நாள்தோறும் செய்கின்ற செயல்களின் அடிப்படையிலேயே ஒருவரிடம் தற்பெருமை என்னும் குணம் உருவாகிறது. தொடர்ந்து ஒருவர் தன்னை மற்றவரோடு ஒப்பீடு (Comparison) செய்துகொள்ளும்போது சில எண்ணங்கள் அவரிடம் தோன்றுகின்றன.

‘நான் என் நண்பனைவிட சிறந்த அறிவாளி’, ‘நான் அவளைவிட அழகாக இருக்கிறேன்’, ‘என் அலுவலகத்தைவிட அவரது அலுவலகம் ஒன்றும் பெரியதாக இல்லை’, ‘அவளைவிட நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என யாராவது ஒருவருடன் தன்னை ஒப்பீடுசெய்து சிலர் தங்களின் ‘தற்பெருமை’யை உயர்த்திக் கொள்கிறார்கள்.

மற்றவர்கள் தன்னைப்பற்றி எதுவும் கேட்காத நிலையில்கூட, தன்னைப் பற்றிய பெருமைகளை மிகைப்படுத்தி மற்றவரிடம் அழுத்தமாகச் சொல்லும்போது சிலரிடம் ‘ஈகோ’ எனப்படும் ‘தற்பெருமை’ தலைகாட்டிவிடுகிறது. அடுத்தவர்கள்மீது கொள்ளும் பொறாமை உணர்வினாலும், சிலர் மற்றவர்களை மட்டம் தட்டிப்பேசி தற்பெருமையை வெளிக்காட்டுகிறார்கள்.

மற்றவர்களுடைய சிறு தவறையும் பூதக்கண்ணாடி போட்டு பெரிதாக்கிப்பார்த்து அவர்களைப்பற்றி அவதூறு பரப்பும்போதும் சிலரிடம் ‘தற்பெருமை’ குடிகொண்டுவிடுகிறது. ‘விவாதத்தில் வெற்றி பெற வேண்டும்’ என்ற எண்ணத்தில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசும்போதும் சிலர் தற்பெருமையுடன் பேசும் நிலை உருவாகிவிடும். எதிர்பார்த்தபடி நிகழ்வுகள் நடக்காததால் பிறரைக் குறைசொல்லும்போது, தன்னை நல்லவன்போல காட்டி மிகைப்படுத்தி தற்பெருமையுடன் பேசும் சூழலும் ஏற்பட்டுவிடுகிறது.

தற்பெருமை பேசி பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்க உதவும் சில வழிமுறைகள் உள்ளன. அவற்றுள் சில:

1. உங்களைப்பற்றி எப்போதும் பிறரிடம் பெருமையாகப் பேசுவதை தவிர்த்துவிடுங்கள்: தேவையில்லாத சூழலில் உங்களைப்பற்றி அடிக்கடி பெருமையாக மற்றவர்களிடம் பேசும்போது அது மற்றவர்களுக்குப் பயன்படாத தகவலாக மாறுகிறது. தற்பெருமையாகவும் வடிவெடுக்கிறது.

2. மற்றவர்கள் பாராட்டுவதைக் கேட்க வேண்டும் என எப்போதும் எதிர்பார்க்காதீர்கள்: படிப்பில் முதலிடம் பெற்ற மாணவிகள்கூட சிலவேளைகளில் ‘எனக்கு ஞாபக சக்தி மிகவும் குறைவு’ என்று சொல்வார்கள். ‘நீ அப்படிச் சொல்லக்கூடாது. நீதான் சிறந்தவள்’ என்று மற்றவர்களிடமிருந்து பாராட்டு பெற்ற பின்னர் மகிழ்வார்கள். இத்தகைய பாராட்டை அடிக்கடி கேட்க அவர்களது மனம் ஏங்கும்போது ‘ஈகோ’ எனப்படும் ‘தற்பெருமை’ உருவாகிறது. பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காகச் சிலர் ஏதாவது பேசுவார்கள். தன்னை மற்றவர்களிடம் தரம் தாழ்த்திப் பேசி, அதனை அவர்கள் மறுப்பதன் மூலம் மகிழ்ச்சி காண்பதைத் தவிர்ப்பது நல்லது.

3. ‘நான் எப்போதும் சரியானவன்’ என்ற எண்ணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்: ‘நான் எப்போதும் சரியாகத்தான் நடந்துகொள்கிறேன்’ என்ற எண்ணத்துடன் செயல்படுபவர்கள், மற்றவர்களுடைய செயல்கள் சரியாக இருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்வதில்லை. ‘என்னால் மட்டுமே எதையும் சரியாகச் செய்ய முடியும்’ என்று எண்ணி பிறரின் கருத்துகளை கேட்கக்கூட விரும்பாதவர்களுக்கு, ‘தற்பெருமை பிடித்தவர்கள்’ என்ற பட்டமும் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, தவறுகளைத் திருத்திக்கொள்ளவும், மற்றவர்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளவும் பழகிக்கொள்வது நல்லது.

4. உங்களிடமுள்ள நல்லவற்றை எண்ணி மகிழுங்கள்: ‘என்னிடம் அது இல்லை, இது இல்லை’ என்று சொல்லி வருத்தப்படுவதற்குப்பதில், உங்களிடம் இருக்கும் நல்லவற்றை எண்ணி மகிழுங்கள். குறிப்பாக, உங்கள் உடலமைப்பு, பணம், வேலை, சுற்றுப்புறச்சூழல் இவற்றைப்பற்றி தாழ்வாக எண்ணாமல், அவற்றினால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி அதிகம் சிந்தியுங்கள். இல்லாததைப்பற்றி மனம் ஏங்கும்போது, அவற்றைப் பெறுவதற்காக இல்லாத ஒன்றை இருப்பதுபோல காட்டிக்கொண்டு ‘தற்பெருமை’ பேச வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். இதனைத் தவிர்க்க, உங்களிடம் இருப்பவற்றில் திருப்தி காணும் மனநிலையை வளர்த்துக்கொள்ளுங்கள்.

இதுபோன்ற பல வழிமுறைகளைப் பயன்படுத்தி ‘ஈகோ’ எனப்படும் ‘தற்பெருமை’யைத் தவிர்க்க நீங்கள் முயற்சி செய்யலாம். இதன்மூலம் நல்ல நண்பர்களையும், சிறந்த உறவுகளையும் பெற்று நிம்மதியுடன் சிறப்பாக வாழலாம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *