முக்கிய செய்திகள்

ஈராக்கின் யசீடி மக்கள் மீதான இப்படுகொலைகளை விசாரிக்கும் நடவடிக்கைகளில் கனடாவும் ஈடுபட்டுள்ளது.

1338

ஈராக்கின் யசீடி மக்கள் மீதான இனப்படுகொலை நிலவரம் தொடர்பிலான உண்மை அறியும் குழு ஒன்றினை கனடா ஈராக்கிற்கு அனுப்பி வைத்துள்ளது.

யசீடி இன மக்களின் அடையாளங்களை அழிக்கும் அளவுக்கு திட்டமிட்ட ரீதியில் அங்கு இடம்பெற்றுவந்த கொடூரங்களை அடுத்து,குறித்த அந்த பகுதிகளில் இருந்து பலத்த சிரமங்களின் மத்தியில் தப்பிவரும் அகதிகளுக்கு எவ்வாறு உதவலாம் என்ற விடயங்களை இந்த கனேடிய குழு ஆராயும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பிலான தகவலை நாடாளுமன்றில் வெளியிட்டுள்ள அகதிகள் மற்றும் குடிநுளைவுத்துறை அமைச்சர் ஜோன் மக்கலம், அங்கு இயல்புக்கு முரணான, மிகவும் பாரதூரமான சம்பங்கள் இடம்பெற்றுவருவதனை தாம் அறிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தின் தீவிரத் தன்மையையும், அங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களையும் கருத்தில் கொண்டே தமது திணைக்களம் உரிய அதிகாரிகளை அங்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈராக்கின் நிலவரத்தினை ஆய்வு செய்வதற்காக அங்கு சென்றுள்ள கனேடிய குழுவினர், அவர்களாகவே பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, தகவல்களைச் சேகரித்து, எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன என்ற முடிவுகளை மேற்கொள்வார்கள் எனவும் அவர் விபரித்துள்ளார்.

குறித்த இந்த நடவடிக்கை தொடர்பிலான திட்டம் கடந்த கோடை காலத்தில் இருந்தே பரிசீலனையில் இருந்துவந்த போதிலும், பணியாளர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, மிகச் சொற்ப அளவிலான தகவல்கள் மாத்திரமே வெளியிடப்படும் என குடிவரவுத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஈராக்கின் குறித்த அந்த யசீடி இன மக்களது பகுதிகளை கடந்த 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் சுற்றிவளைத்து தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்த ஐ.எஸ் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பினர், அந்த மக்களின் அடையாளங்களையே அழிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் நிறுவனம், அந்த நடவடிக்கையை இனஅழிப்பு என வகைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *