முக்கிய செய்திகள்

ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை மாறாத்துயரை என்றென்றும் நினைவுபடுத்தும் கரிநாள்- சிங்களப் பேரினவாதாத்தின் 71வது சுதந்திர தினம்

318

தமிழீழத் தாய்மண்ணில் ஒன்றரை லட்சம் உறவுகளின் இரத்த ஆறு ஓடி பத்தாண்டுகள் ஆகிற நிலையில், இந்தப் பத்தாண்டுகளைத் திரும்பிப் பார்க்கிற எவரும் சிறிலங்காவின் சுதந்திர தினத்தில் பங்கேற்க மாட்டார்கள். சிங்களப் பேரினவாதாத்தின் 71வது சுதந்திர தினம் ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை மாறாத்துயரை என்றென்றும் நினைவுபடுத்தும் கரிநாள்.

தமிழீழத் தனியரசை அமைத்து எமது நாட்டைப் பிரகடனப்படுத்தும் தருவாயில் நின்ற எம்மை சர்வதேசமும் சிங்களமும் சேர்ந்து நிர்மூலமாக்கி எம்மை அரசியல் அநாதைகள் ஆக்கி புலிகளின் கைகளில் இருந்த எமது தேசத்தை வலுக்கட்டாயமாகப் பறித்து ஓநாய்களிடம் ஒப்படைத்துவிட்டது. இனி நாம் போகவேண்டிய தூரம் அதிகம் என்பதை எளிதில் எல்லோராலும் அவதானிக்க முடியும்.

நாம் வேறெவரின் மண்ணையும் அபகரிக்க முயலவில்லை….. வேறெவரின் உடைமைக்கும் ஆசைப்படவில்லை….! ஆதிக்க சக்திகளால் அபகரிக்கப்பட்ட நமது தாய்மண்ணை மீட்கவே நாம் போராடினோம்… பறிக்கப்பட்ட சுதந்திரத்தையும் உரிமைகளையும் மீட்கப் போராடினோம். இது யாருடைய பிழை என்பதை அறிந்திருந்தும், பிழைவிட்ட சிங்களப் பேரினவாதத்துக்குத் துணையாய் வளர்ந்த நாடுகள் நின்ற களங்க வரலாற்றை இன்னும்கூட நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

2008 – 2009ல் தமிழீழ மண்ணில் அரங்கேற்றப்பட்டது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை. பிறப்பின் கண் களங்கமற்ற எவராலும், இந்த வலிமிகுந்த உண்மையை அறிந்தும் அறியாதவர்கள் போல் அறிதுயிலில் கிடக்க முடியாது. ‘போர்க்குற்றம்’ என்கிற வார்த்தையால் ‘இனப்படுகொலை’யை மறைக்க முயல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மன்னிக்க முடியாது.

இலங்கையின் கொலைக்குற்றத்தை மறைக்க, ‘இருதரப்பிலும் தவறு நடந்தது’ என்று இட்டுக்கட்டிப் பேசுவோரைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது. ‘வவ்வாலைக் கல்யாணம் செய்ய ஆசைப்படுபவன் தலைகீழாகத் தொங்கித்தான் ஆக வேண்டும்’ என்பதற்கு உதாரண புருஷர்களாக விளங்குகிறார்கள் அவர்கள்.

உள்ளுரில் வைத்து ‘இரு தரப்புக் குற்றம்’ என்று ஊளைவிடும் அவர்கள், ஜெனிவாவில் பின்கதவால் வந்து எமது மக்களையும் எம் தேசியத்தையும் விற்றுப் பிழைப்பு நடத்துகின்றனர். தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களின் முக்கியமான பங்கானது தமிழின அழிப்புக் குறித்து மூன்றாம் தரப்பான சர்வதேசம் உடனடியாகத் தலையிட்டு விசாரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலுவாக வலியுறுத்துவோம்.

04. பெப்ரவரி 1948 இல் அடித்தளமிடப்பட்ட தமிழின அழிப்பின் உச்சம் 04. பெப்ரவரி 2019 உடன் 71 வருடங்களாகின்றது. ஒரு இன அழிப்பிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் பேரவையினால் 1948ல் உருவாக்கப்பட்ட மனித உரிமைச் சாசனத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து உறுப்புரிமைகளையும் சிங்கள தேசம் மீறியுள்ளது.

ஜெனிவாவில் இனிமேல் புதிய தீர்மானம் எதுவும் நிறைவேற்றிப் பிரயோசனம் இல்லை என்ற நிலையில், சர்வதேசத்தின் பங்களிப்புடன் சர்வதேச குற்றவியல் நீமன்றில் ஒரு நீதியான விசாரணை நடக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை நிறைவேற்றுவதின் ஊடாகத்தான் தமிழர் தமக்குக் கிடைக்க வேண்டிய நீதியைப் பெறமுடியும்.

ஜெனிவா தீர்மானம் என்பது, வெற்றுக் காகிதமல்ல…. அது உலக நாடுகளின் பிரகடனம். அது ஒரு பெறுமதியான தீர்மானம் என்று பசப்புத்தனமாக அறைகூவலிடும் உலக நாடுகளே சிறிலங்காவிடம் இதுபற்றி அழுத்திச்சொல்லுவதாகத் தெரியவில்லை. இந்தத் தீர்மானத்தை அமுல்படுத்த வேண்டும் என்பதை உலகுக்கு உணர்த்தவேண்டிய பொறுப்பும் சுயமதிப்பும், ஜெனிவா மன்றத்திலுள்ள நாடுகள் ஒவ்வொன்றுக்கும் இருக்கிறது.

தமிழர் தாயகமான வடகிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமாகவும், ராணுவத்தால் அபகரிக்கப்பட்ட காணிகள் சம்பந்தமாகவும் சர்வதேசத்துக்குக் கொடுத்த வாக்குறுதிகளை இன்றுவரை இலங்கை காப்பாற்றவில்லை. தமிழர் தாயகத்தில் புதிது புதிதாக பௌத்த ஆலயங்கள் முளைப்பதும், பாரம்பரியப் பெருமை மிக்க தமிழர் வரலாறு பாட நூல்களில் மறைக்கப்படுவதும் இன்றும் தொடர்கிறது. ராணுவமே நடத்தும் முன்பள்ளிகள், பயமறியாத நம்மினத்தின் அடுத்த தலைமுறையை, சுயமறியாத் தலைமுறையாக மாற்ற நடக்கிற திட்டமிட்ட சதி. இதற்கெல்லாம் எதிரான நமது குரல், கேளாச்செவியினராய்க் கிடக்கும் உலக நாடுகளின் காதைக் கிழிக்குமளவுக்கு வலுவானதாக இருக்க வேண்டியது அவசியம்.

தமிழர் தாயகத்தை மீட்பது, தமிழின அடையாளங்களை மீட்பது, சுய நிர்ணய உரிமையை உறுதி செய்வது – என்கிற மூன்றும் தேசியத் தலைவரின் மூச்சுக்காற்றாய்த் திகழ்ந்தது. ஊலகத் தமிழினத்தின் ஒற்றை அடையாளமான அந்த உன்னத மனிதர், பேராசையோடோ, போராசையோடோ அளவுக்கதிகமாக எதையும் வலியுறுத்தியதில்லை. நாமும் அவற்றைத்தான் வலியுறுத்துகிறோம்.

புதிய அரசியல் சட்டம் என்கிற பெயரில், தமிழ் மக்களின் அரசியல் வேணவாவை குழிபறிக்கின்ற எந்தச் சதியையும் அனுமதிக்க மாட்டோம், வடக்குக் கிழக்கு இணைப்பற்ற ஒரு கண்துடைப்பு அரசியல் யாப்பை தமிழர்களை வைத்தே அமூல்படுத்துவதற்கு சிங்கள அரசு துடிக்கின்றது. பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுத்து பிரிக்கப்படாத, பிரிக்கப்பட முடியாத ஒரு நாட்டிற்குள் ஒற்றையாட்சி என்ற பௌத்த மேலாண்மைக்குள் எம்மை அடிமைப்படுத்த முயலும் சிறிலங்காவின் எந்த அரசியல் யாப்பையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசியல் கைதிகளும் தமிழரின் காணிகளும் விடுவிக்கப்படுகிற வரை ஓயமாட்டோம், இனப்படுகொலை செய்த இலங்கை அசுரர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் வரை சோர்ந்துவிட மாட்டோம் என்று, முள்ளிவாய்க்கால் மண்ணை இரத்தத்தால் நனைத்த பத்தாவது ஆண்டில் உறுதியேற்போம்.

தமிழரை அடிமைப்படுத்துவதொன்றே இலங்கையின் கொள்கையாக இருப்பதைப் புரிந்துகொண்ட பிறகுதான் தந்தை செல்வா அவர்கள், இலங்கை சுதந்திர தினத்தைக் கரிநாளாக அறிவித்துப் புறக்கணித்தார். செல்வாவின் வழியில், கொலைகார இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை நாமும் புறக்கணிப்போம், பிப்ரவரி நான்காம் நாளைத் துக்க நாளாகக் கடைப்பிடிப்போம்! உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் அனைவரும் பௌத்த ஏகாதிபத்தியத்தின் சுதந்திர தினத்தை புறக்கணிக்க வேண்டும் என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சார்பாக உரிமையுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தமிழரின் ஒற்றுமையின்மையே, சிங்களவர்களின் ஆதிக்கம் விரிவடைய காரணமாக இருந்தது என்பதை நினைவில் கொண்டு, தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த தமிழின சக்திகளை ஒருங்கிணைப்போம்….! தமிழரின் தாயகமான வடக்கிலும் கிழக்கிலும், ஊசித் துளையில் நூல் நுழைகிற அளவுக்குக் கூட சிங்கள சக்திகள் நுழைந்து விட முடியாத அளவுக்கு கூர்மையாய்க் கண்காணிப்போம்!

வாகரை முதல் முள்ளிவாய்க்கால் வரை எம் தாயகத்தின் சுதந்திரத்துக்காக உயிரிழந்த ஒன்றரை லட்சம் உறவுகளின் பெயரால் ‘சுய நிர்ணய உரிமை எங்கள் பிறப்புரிமை’ என்ற அடிப்படையில் எமது சுதந்திரத் தமிழீழத்தைப் பிரகடனம் செய்வோம்…..! அவர்கள் வழியில் நிற்போம்…… அவர்கள் கனவுகளை நனவாக்குவோம்….!

”தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *