முக்கிய செய்திகள்

ஈழத்தமிழர் படுகொலை குறித்து அனைத்துலக நீதி விசாரணை வேண்டும்,

1335

ஈழத்தமிழர் படுகொலை குறித்து அனைத்துலக நீதி விசாரணை வேண்டும், தமிழர் தாயகப் பிரதேசங்களில் நிலைகொண்டிருக்கின்ற இராணுவம் அகற்றப்படவேண்டும், சிங்களக் குடியிருப்புகள் அகற்றப்பட வேண்டும், சுதந்திரத் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பவற்றை வலியுறுத்தி, ஐ.நாவின் உயர் அதிகாரிகளுக்கு மின்னஞ்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஐ.நா.வின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ், ஐ.நாவின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் ஆகியோருக்கு இந்த மின்னஞ்சல்களையும், துரித தபால்களையும் தனித்தனியாக
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் வைகோ அனுப்பிவைத்துள்ளார்.

ஈழத் தமிழர் இனப்படுகொலை குறித்து ஐ.நா மனித உரிமை பேரவையில் ஆக்கபூர்வமான தீர்மானங்களை நிறைவேற்றவேண்டும் என்பதுடன், ஈழத்தமிழர் படுகொலை குறித்து அனைத்துலக நீதி விசாரணை வேண்டும் என்பன அந்த கடித்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் சனல்-4 வெளியிட்ட தமிழர் படுகொலைக் காட்சிகளையும், அண்மையில்கூட யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டது உள்ளிட்ட அண்மைக் கால நிகழ்வுகள் அனைத்தையும் அவர் விளக்கமாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உலகத்தின் மனசாட்சியை உலுக்கிய ஈழத் தமிழர் இனப்படுகொலை குறித்தும், கடந்த 60 ஆண்டு காலத்தில் இலங்கை அரசாங்கங்கள் செய்த கொடுமைகளையும், ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் தனி அரசாங்கத்தை அமைத்து வாழ்ந்த சிறப்பையும், தமிழர்கள் தமது உரிமைகளுக்காக அறவழியில் போராடியுள்ளதையும் அவர் சுட்டிககாட்டியுள்ளார்.

1976 மே 14 இல், வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா அறிவித்த சுதந்திரத் தமிழ் ஈழப் பிரகடனத்தையும், இராணுவத்தின் துணை கொண்டு இலங்கை அரசாங்கம் நடாத்திய கொடிய அடக்குமுறையை எதிர்த்து தலைவர் பிரபாகரன் தலைமையில் மூண்டெழுந்த ஆயுதப் புரட்சியையும், ஈழத் தமிழர்களுக்கு காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசாங்கம் செய்த மன்னிக்க முடியாத துரோகத்தையும் அவர் அந்தக் கடிதத்தில் பட்டியலிட்டுள்ளார்.

அத்துடன் மனித உரிமை பேரவையில் ஈழத்தமிழர்களுக்கு நீதி மறுக்கப்பட்டதையும், ஐ.நா.வின் பொதுச்செயலாளர் அமைத்த மூவர் குழு அறிக்கையையும், மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் தொடர்ந்து நடத்துகிற பெரும்பான்மையின குடியேற்றத்தையும், தமிழர்களுக்கு எதிரான அநீதியையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2012 மார்ச் 27 ஆம் நாளன்று ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் தனது அறிக்கையோடு இணைத்து, ஐ.நா அதிகாரிகளுக்கு வைகோ அனுப்பி வைத்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *