முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஈழத்தமிழர் வாழ்வின் இருளகற்றி விடுதலை ஒளியேற்றும் ஆண்டாக ஆங்கிலப் புத்தாண்டு மலரட்டும்

1327

ஈழத்தமிழர் வாழ்வின் இருளகற்றி விடுதலை ஒளியேற்றும் ஆண்டாக ஆங்கிலப் புத்தாண்டு மலரட்டும் என்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவுடன் பிறக்கவுள்ள 2017ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே ஈழத்தமிழர் மக்களவை இவ்வாறு கூறியுள்ளது.

ஈழத்தமிழர்களின் சுதந்திர வாழ்வின் அடித்தளத்தில் கட்டியெழுப்பப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வீச்சு தமிழர் தாயகத்தில் ஒளிப்பிளம்பாய் ஒளிபரப்பிவந்த நிலையில் ஆயுத மௌனிப்புடன் கனத்த இருள் சூழ்ந்துகொண்டது என்பதனையும் அது நினைவுகூர்ந்துள்ளது.

ஆயுதப் போராட்டத்தின் தோற்றுவாயாகத் திகழ்ந்த எல்லை தாண்டிய சிங்களக் குடியேற்றங்கள், இனரீதியிலான ஒடுக்குமுறைகள், இன அழிப்பு இராணுவத்தின் கொலைவெறியாட்டம் என்பன ஆயுத மௌனிப்பின் பின்னர் மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் தமிழர் தாயகத்தில் தொடர்ந்தே வருகின்றன என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இதுவரை நடைபெற்ற இன அழிப்புக்கான பொறுப்புக் கூறலின் அடிப்படையிலான நீதியும் வல்லாதிக்க நாடுகளின் மேற்பார்வையில் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது எனவும் அது சாடியுள்ளது.

உலகம் ஏற்றுக்கொண்ட வழிமுறைகளில் எமக்கான நீதியை பெற்றுக்கொள்வதற்கான முன் முயற்சிகளில் தாம் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், நியாய – தர்மத்தின் அடிப்படையில் எமக்கு கிடைக்க வேண்டிய நீதியை தாமதப்படுத்தலாமே தவிர எந்த சக்தியாலும் ஒருபோதும் தடுக்கவே முடியாது என்பதனையும் அது வலியுறுத்தியுள்ளது.

சத்திய இலட்சியத்திற்காக மரணித்த மாவீரர்கள் மற்றும் தேச விடுதலைப் பயணத்தில் உடனிருந்து உயிர்துறந்த எமதருமை பொதுமக்களின் நல்லாசியுடனும், விடுதலை வேட்கையுடன் உலகெங்கும் வாழ்ந்துவரும் உலகத் தமிழர்களின் பேராதரவுடனும், புயல்வீச்சின் நிமிர்வாய் இவையனைத்தையும் முறியடித்து வெற்றிகாண்பது திண்ணம் எனவும் ஈழத்தமிழர் மக்களவை உறுதிப்பாட்டினை வெளியிட்டுள்ளது.

ஈழத்தமிழர் வாழ்வில் கவிந்திருக்கும் கனத்த இருளகற்றி விடுதலை ஒளியேற்றும் ஆண்டாக புலரும் ஆங்கிலப் புத்தாண்டு ஒளிபரப்பும் என்ற நம்பிக்கையுடன் விடுதலைப் பணியாற்றுவோம் எனவும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை அழைப்பு விடுத்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *