ஈழத்தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தியதான கொள்கை அடிப்படையில் விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம் என்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்ததுள்ளது

559

ஈழத்தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தியதான கொள்கை அடிப்படையில், முன்னாள் நீதியரசரும் வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான விக்னேஸ்வரனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம் என்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வலியுறுத்தியுள்ளது.

ஆயுத மௌனிப்பின் பின்னரான தாயக அரசியலானது ஈழத் தமிழ் மக்களின் நலனுக்கு நேர் விரோதமான பாதையில் பயணப்பட்டு, ஈற்றில் சிங்கள பௌத்த பேரினவாத நச்சு வட்டத்திற்குள் மீண்டெழ முடியாத இக்கட்டில் தமிழர்களது தலைவிதியை கொண்டு போய் நிறுத்தியுள்ளது என்பதனை அது சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான இக்கட்டில் இருந்து எமது மண்ணையும் மக்களையும் மீட்டெடுக்க வேண்டுமாயின் கொள்கை அடிப்படையில் ஒன்றிணைந்த வலுவான அரசியற் கூட்டணி ஒன்றை உறுதியான தலைமைத்துவத்தின் கீழ் உடனடியாக ஏற்படுத்தியே ஆகவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் எனவும் அது தெரிவித்தள்ளது.

நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களது உயிர் விதை விதைத்து, இலட்சக்கணக்கான தமிழ் மக்களது உயிர்த் தியாகம் சுமந்து, நான்கு தசாப்தங்களாக நடந்தேறிய விடுதலைப் போராட்டம் பாதுகாத்து நின்ற தமிழீழ மண்ணையும் மக்களையும், ஆயுத மௌனிப்பின் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில், அழித்தொழித்து அடிமைப்படுத்த துடித்துக் கொண்டிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாத பேய்களிடமே கையளித்து நிற்கும் கயமைத்தனத்தினை தமிழர்களின் அரசியல் தலைமையாக கருதப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யத் துணிந்துள்ள பின்னணியில்தான் மாற்று அரசியல் தலைமையின் தேவை மிக மிக அவசியமாக உணரப்பட்டுள்ளது எனவும் அது விபரித்துள்ளது.

தாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாட்டின் அடிப்படையிலான அரசியற் செயற்பாட்டின் மூலமாக, தமிழர்களது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக இருந்து பலம் சேர்க்கும் நோக்கில், தமிழீழத் தேசியத் தலைமையால் உருவாக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இவ்வாறான செயற்பாடானது, ஆயுத மௌனிப்பின் பின்னர் தீட்டிய மரத்தில் கூர் பார்க்கும் அயோக்கியத்தனத்தை விஞ்சியதாக அமைந்திருக்கிறது எனவும் அது அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறான அரசியற் பின்புலத்தில் மாற்று அரசியல் தலைமை ஒன்றை உருவாக்கும் முனைப்பில் நீண்ட காலமாக முன்னின்று பாடுபட்ட தரப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இருந்து வருகின்றது எனவும் அது குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் கடந்த 18 ஆம் நாள் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் விடுத்த கோரிக்கையை ஈழத் தமிழர் சுதந்திர வாழ்வில் உண்மையாக அக்கறையுடைய தரப்புகள் ஏற்று மாற்று அரசியல் தளத்தை பலப்படுத்துமாறு அனைத்துலக ஈழத்தமிழ் மக்கள் சார்பில் நாம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்வதாகவும் அது தெரிவித்துள்ளது.

‘மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளைப் போக்குவதற்கு திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை’ எனும் தேசியத் தலைவரது சிந்தனையை வேதவாக்காக கொண்டு, நாம் வாழ வேண்டும் என்பதற்காக தமது இன்னுயிரை ஆகுதியாக்கிய மண்ணுறங்கும் மாவீரர்களது கனவுகளையும், இலட்சியங்களையும் எமது தோள்களில் சுமந்து செல்வதுடன், அவ்வழி நின்று தாயக மண்ணினதும் மக்களினதும் விடுதலையை வென்றெடுக்க பாடுபடுவோம் என்றும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை அழைப்பு விடுத்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *