ஈழ, தமிழக, புலம் பெயர் தமிழர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழர்களுக்கு தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்று சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1091

ஈழத் தமிழர்கள், தாய்த் தமிழக மக்கள், உலக நாடுகளில் வாழக்கூடிய புலம் பெயர் தமிழர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழர்களுக்கான பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  வட மாகாணசபை  உறுப்பினர் சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளிதத சிவாஜிலிங்கத்திடம், இந்த மாவீரர் நாளில் உலக நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு முன்வைக்கும் கோரிக்கை என்ன என்று கேட்டதற்குப் பதிலாகவே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

அவ்வாறு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மாத்திரமே “எங்களை நாங்களே ஆளக்கூடிய ஒரு தீர்வை தமிழ் மக்கள் வென்றெடுக்க முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வுக்கான நடவடிக்கையை இலங்கையில் இருந்துகொண்டு சிறு துளி அளவு கூட முன்னெடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், அனைத்துலக சமூகங்களால் மட்டுமே அதனைச் செய்து தர முடியும் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் இறுதி போரில் தமிழர்களுக்கு இழைக்க்ப்பட்ட அநீதிகளுக்கு உள்நாட்டு விசாரணைகளால் எந்தப் பயனும் இல்லை என்றும், அனைத்துலக விசாரணை மட்டுமே தாயகத்தில் உள்ள தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்டப் போரில் சரணடைந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்துப் பதில் சொல்ல இலங்கை அரசு மறுப்பதையும் சுட்டிக்காட்டிய அவர், இந்த காணாமல் போன சம்பவங்கள் அரச படைகளால்தான் நிகழ்ந்துள்ளதுள்ளன என்றும், இவ்வாறு போரின்போது காணாமல் போனவர்கள் தொடர்பில்  ஐக்கிய நாடுகள் சபையில் தாங்கள் தெரிவித்து வருவதாகவும் விபரித்துள்ளார்.

இதேவேளை தமிழர் தாயகக் பகுதிகளில் மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஆனால் இதனைத் தடுக்க இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டினுள் இருந்த பகுதிகள் உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகள் முழுவதும் படையினரின் சுற்றுக் காவல்ப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ள அவர், இவற்றைக் கண்டு தாங்கள் அச்சம் கொள்ளப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்காக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் வீர மரணம் அடைந்தும், போரினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும் உள்ள நிலையில், மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுக்கப்பதன் மூலம்தான் தமிழ் மக்களுக்கான உரிமையை தொடர்ந்தும் நிலைநாட்ட முடியும் என்றும் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *