உணவுப் புறக்கணிப்பில் ஈடபட்டுள்ள அரசியல் கைதிகள் குறித்து மூன்று நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக இலங்கையின் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்

354

ஜே.வி.பி. கலவரங்களிலும், 1983 கலவரங்களிலும் கைது செய்யப்பட்டவர்களை பொதுமன்னிப்பில் விடுதலை செய்ததைப் போன்று, தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இல்கையின் பிரதமர், நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருடனான சந்திப்பின்போது, எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் நேற்று ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுநடத்தினர்.

இந்த சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவருடன் நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது சனாதிபதி நாடு திரும்பியவுடன் மீண்டும் பேச்சு நடத்தி அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தீர்மானம் எடுப்பதாக, அரச தரப்பு, எதிர்க்கட்சி தலைவருக்கு வாக்குறுதி கொடுத்துள்ளது.

இதேவேளை அனுராதபுர சிறைச்சாலையில் உணவுப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாதமை மற்றும் காலதாமதங்கள் குறித்து உடனடியாக கவனம் செலுத்துவதாக இலங்கையின் சட்டமா அதிபர் உறுதியளித்துள்ளார்.

அத்துடன் உணவுப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கும் அரசியல் கைதிகளின் விவகாரம் குறித்து இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

போர்க் காலகட்டத்தில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் பலர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், இப்போதும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நபர்கள் பாரிய குற்றங்களின் பெயரில் கைதுசெய்யப்பட்டவர்கள் எனவும், அவர்களை விடுதலை செய்வது கடினமானது எனவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *