முக்கிய செய்திகள்

உரிமையை மறுக்கும் இனவாதத்துக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்

1082

மட்டக்களப்பு நகரில் எதிர்வரும் 21ஆம் நாள் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் எழுக தமிழ் பேரணியில் அணி திரளுமாறு புத்தாண்டு நாளில் அறைகூவல் விடுப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான வசந்தராசா தெரிவித்துள்ளார்.

உரிமைக்காக சலுகைகளை மறுத்து கடந்த 6 தசாப்தங்களுக்கும் மேலாகப் போராடி, ஆயுதப் போராட்டம் மௌனித்து 7 ஆண்டுகளாகி விட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் ஜெனீவா தொடங்கி அனைத்துலக சமூகங்கள் வரை எமது உரிமைக்கான குரல் உரக்க ஒலித்தும், இலங்கை அரசாங்கம் இனப் பிரச்சினை தொடர்பாக தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை அங்கீகரிக்கப்தற்கு தயாரில்லாத நிலைப்பாட்டை முறியடிப்பதற்கு, எழுக தமிழ் போராட்டம் தேவையாகவுள்ளது என்பதனையும் அவர் விபரித்துள்ளார்.

இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களே தமிழர் தாயகம் என்பதுடன், சுயநிர்ணயத்துடனான சமஷ்டித் தீர்வையே வலியுறுத்துகின்றோம் என்பதையும், தமிழர் தாயகத்தைச் சீர்குலைக்கும் திட்டமிட்ட குடியேற்றங்களை உடன் நிறுத்த வேண்டும் என்பதுடன், விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரும் வகையிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் போர்க் குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றுக்கான அனைத்துலக விசாரணை வேண்டும் என்று உலகத்துக்கு வலியுறுத்தியும், தமிழ் பேசும் மக்கள் மீதான அரசியல், சமூக, பொருளாதார தொழில் வாய்ப்பு ரீதியான ஒடுக்கு முறைகளுக்கு எதிரான கண்டனங்கள் உட்பட, இன்னும் பல விடயங்களை வலியுறுத்தியே இந்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நடைபெறவுள்ளது எனவும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான வசந்தராசா மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *