முக்கிய செய்திகள்

உறுப்பு நாடுகள் மத்தியில் ஆதரவுப் பிரசாரங்களை முன்னெடுப்பு

37

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை முன்வைக்கும் அனுசரணை நாடுகளான கனடா மற்றும் பிரித்தானியாவின் தூதுவர்கள், பேரவையின் உறுப்பு நாடுகள் மத்தியில் ஆதரவுப் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான தீர்மான வரைவு ஒன்றை, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட ஆறு அனுசரணை நாடுகள் முன்வைத்துள்ளன.

இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு, அனுசரணை நாடுகளும், அமெரிக்காவும் ஏனைய உறுப்பு நாடுகளின் ஆதரவைக் கோரி பிரசாரங்களை முன்னெடுத்துள்ளன.

இந்தநிலையில், கொழும்பிலும் இந்த ஆதரவுப் பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அண்மையில் சிறிலங்காவுக்கான கனடிய தூதுவர் டேவிட் மக்கினன், (David McKinnon) கொழும்புக்கான பங்களாதேஷ் தூதுவர் தாரிக் அரிபுல் இஸ்லாமை (Tareq Ariful Islam) சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்த இரண்டு நாடுகளின் இராஜதந்திரிகளுக்கும் இடையிலான சந்திப்புகள் நடப்பது அரிதானது என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை மற்றொரு அனுசரணை நாடான பிரித்தானியாவின் சிறிலங்காவுக்கான தூதுவர் சாரா ஹல்டன் (Sarah Hulton), கொழும்பில் உள்ள தென்கொரிய தூதுவர் வூன்ஜின் ஜியொங்கை (Woonjin Jeong) சந்தித்துப் பேசியுள்ளார்.

தென்கொரியாவும், பங்களாதேசும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளாக இருக்கும் நிலையில், இந்தச் சந்திப்புகள் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *