உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:

347

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், உள்நாட்டுப் பார்வையாளர்கள் அதிக அளவு குவிந்தனர்.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும் மதுரை அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டி, இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கியது. இந்தப் போட்டியில் களம் இறக்க 1,400 மாடுபிடி வீரர்களும் 960 காளைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்தார்.

முதலில் 3 கோயில் காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டன. வெற்றியோ, தோல்வியோ தங்கள் காளைகளை எப்படியாவது அலங்காநல்லூர் வாடிவாசலில் களம் இறக்கியே தீர வேண்டும் என்ற ஆர்வத்தில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, ஈரோடு, கோவை, தேனி மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த காளைகளுடன் அதன் உரிமையாளர்கள் புதன்கிழமை இரவே அலங்காநல்லூருக்கு வந்தனர்.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள், இந்த ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்டன. அதில் ஒன்றைக் கூட மாடுபிடி வீரர்கள் பிடிக்கவில்லை. பிடிபடாத காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் டி.வி, வாஷிங் மிஷின், டைனிங் டேபிள், செல்போன், தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள், ஷோபா, தங்க செயின் உள்ளிட்ட 300 விதமான பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியின் இறுதியாக சிறந்த மாடுபிடி வீரர், சிறந்த காளைக்கு தலா ஒரு கார் பரிசு வழங்கப்படுகிறது. இந்த பரிசுகளை முதல்வர் எடப்பாடி பழனி சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் சிறந்த மாடுபிடி வீரர், காளை உரிமையாளரை சென்னைக்கு வரவழைத்து வழங்க உள்ளனர்.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை காண மாவட்ட சுற்றுலாத்துறையில் 500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்து அழைத்து வரப்பட்டனர். ஆனால் அவர்கள் இருக்கைகள் கிடைக்காமல் சிரமப்பட்டனர். அதேபோல், தனியார் டூரிஸம் டிராவல்ஸ் ஏஜென்சி மூலமாகவும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வெளிமாநில ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தமிழகத்தின் பிற மாவட்ட பார்வையாளர்கள் குவிந்தனர்.

பாலமேட்டில் போதிய முன் ஏற்பாடுகள் செய்யாததால் சிறுசிறு பிரச்சினைகள் நடைபெற்றன. அதனால், அலங்காநல்லூரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதால் பிரச்சினைகள் ஏற்படவில்லை. எஸ்.பி., மணிவண்ணன் தலைமையில் 2,000 போலீஸார் கொண்ட மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று இரவு முதலே முதல் முறையாக இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த காலங்களை விட இந்த ஆண்டு கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்ததால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது. கடந்த ஆண்டு தகுதியில்லாத காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டதால் போட்டியில் சுவாரஸ்யம் குறைந்ததாக பார்வையாளர்கள் ஆதங்கம் தெரிவித்தனர். அதனால், இந்த ஆண்டு தகுதியுள்ள காளைகளே அனுமதிக்கப்பட்டதால் போட்டி அனல் பறந்தது.

அனைத்து பார்வையாளர்களும் ஜல்லிக்கட்டைப் பார்க்க முடியாது என்பதால் 5 இடங்களில் எல்இடி மெகா திரைகளில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஒளிபரப்பப்பட்டது.

நண்பகல் வரை இதில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். ஒருவர் நெரிசலில் சிக்கியதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *