உலகின் கண்காணிப்பு வலையமைப்புக்குள் மீண்டும் சிறிலங்கா; மனோ கணேசன்

45

‘உலகின் கண்காணிப்பு வலையமைப்புக்குள் மீண்டும் சிறிலங்கா வந்து விட்டது’ என்ற பட்டவர்த்தனமான உண்மையை அரசாங்கம் கண்ணை கட்டி, கணக்கு வித்தை காட்டி சிங்கள மக்களிடம் மறைக்க முயல்கிறது என்று முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவை தீர்மானம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில், சிறிலங்காவை  கண்காணித்து, சிறிலங்கா பற்றிய வாய்மொழி அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர்/அக்டோபரிலும், எழுத்து மூல அறிக்கையை அடுத்த வருடம் பெப்ரவரி/மார்ச்சிலும் சமர்ப்பிக்கும்படியும் ஐ.நா தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா திருந்தாவிட்டால் பொறுப்புக்கூறல் தொடர்பாக அடுத்து எடுக்கப்பட வேண்டிய காத்திரமான நடவடிக்கைகளை அடுத்த வருடம் செப்டம்பர்/அக்டோபரில் சிபாரிசு செய்யும்படியும், ஐ.நா. தீர்மானம், ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை கோரியுள்ளது என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசாங்கம் இன்று கண்ணை கட்டி, கணக்கு வித்தை காட்டுகிறது. தமக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளையும், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத நாடுகளையும் கூட்டிக்காட்டி ஐ.நா. தீர்மானம் தோற்றுவிட்டது என கூறுகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பெற்ற வாக்குகள் சுமார் 69 இலட்சம். அவருக்கு எதிராக வாக்களித்த, வாக்களிக்காத, ஒட்டுமொத்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் தொகை சுமார் 90 இலட்சம்.

ஆகவே, “வாக்களிக்காதவர்களும் நம்மவரே” என்ற அரசாங்கத்தின் கணக்கின்படி, கோட்டாபய ராஜபக்ச உண்மையில் தோல்விதான் அடைந்துள்ளார்.

ஆகவே அவர் அரசியலை விட்டு வீட்டுக்கு போக வேண்டுமோ? என்ற கேள்வியை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் கேட்க விரும்புகிறேன் என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *