முக்கிய செய்திகள்

உலகிலேயே மிகவும் எடை குறைவான செயற்கைக் கோள்கலாம் சாட் V2-வை , இந்தியா விண்ணில் ஏவியுள்ளது

311

உலகிலேயே மிகவும் எடை குறைவான செயற்கைக் கோள் எனக் கருதப்படும் கலாம் சாட் V2-வை விண்ணில் ஏவியுள்ளது இந்தியா.

விண்வெளி கல்வி நிறுவனம் ஒன்றின் மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த செயற்கைக் கோளின் எடை 1.26 கிலோ மட்டுமே.

சென்னை அடுத்த ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவு தளத்தில் இருந்து இரவு இந்திய நேரப்படி 11.37க்கு செலுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி44 ராக்கெட். இது சுமந்து செல்லும் செயற்கைக் கோள்களில் கலாம் சாட்டும் ஒன்று. இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வின்போது மையத்தில் இருந்தனர்.

பொழுதுபோக்குக்கு நடத்தப்படும் ரேடியோ சேவைகளான ஹேம் ரேடியோ சேவைகளை நடத்துவோருக்கு இது உதவும். லாப நோக்கமற்ற இந்த ஹாம் ரேடியோ சேவைகளுக்கான தகவல் தொடர்பு செயற்கைக் கோளாக கலாம்சாட் செயல்படும்.

இது பள்ளி மாணவர்களுக்கு எதிர்கால விஞ்ஞானிகளாகவும், பொறியாளர்களாகவும் வருவதற்கான ஊக்கத்தை அளிக்கும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.இஸ்ரோ தலைவர் கே.சிவன் இது பற்றிக் கூறுகையில், “இதுவரை கட்டமைத்து, சுற்றுப்பாதையில் ஏவப்பட்ட செயற்கைக் கோள்களிலேயே கலாம்சாட்தான் மிக எடைகுறைந்த செயற்கைக் கோள்” என்று தெரிவித்துள்ளார்.

இதைவிட எடைகுறைவாக, அதாவது 64 கிராம் எடையில் இந்திய மாணவர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட செயற்கைக் கோள் ஒன்று, கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவில் உள்ள நாசா மையத்தில் இருந்து ஏவப்பட்டது. ஆனால், நான்கு மணி நேரமே நீடித்த இந்த செயற்கைக் கோளின் பயணம் அரைவட்ட பாதையில் சென்றது. அரைவட்டப் பாதையில் செல்லும் செயற்கைக் கோள்கள் விண்வெளிக்கு சென்றாலும் அவை புவியை வட்டப் பாதையில் சுற்றி வருவதில்லை.

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற சென்னையில் இருந்து இயங்கும் விண்வெளி கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் கலாம்சாட் V2-வைஉருவாக்கினார்கள்.இதுவரை இந்திய மாணவர்கள் உருவாக்கிய 9 செயற்கைக் கோள்கள் ராக்கெட்டுகள் மூலம் விண்வெளியை எட்டியுள்ளன.

முதல் முறையாக, இந்த செயற்கைக் கோள் ஏவும் நடவடிக்கையின்போது செலுத்தப்பட்ட ராக்கெட் ஒன்றின் பகுதியை மீட்டு மீண்டும் பயன்படுத்தவுள்ளது இஸ்ரோ.

பாரம்பரியமாக ராக்கெட்டுகள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடியவை. ராக்கெட் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், ராக்கெட்டின் ஒரு பகுதி எரிந்து விழுந்துவிடும். இவை விண்வெளிக் குப்பைகளாகவே சேரும். இதுபோல லட்சக்கணக்கான வீசி எறியப்பட்ட உலோகத் துண்டுகளும், மற்ற பொருள்களும் புவியை சுற்றி வருகின்றன.

பழைய செயலிழந்துபோன செயற்கைக் கோள்கள், ராக்கெட்டுகளின் பாகங்கள், விண்வெளி வீரர்கள் தவறவிட்ட கருவிகள் ஆகியவையும் இவற்றில் அடக்கம். இவற்றால் ஏற்படும் மோதல்கள் பெரிய சேதங்களை ஏற்படுத்துவதோடு, மேலும் அதிக விண்வெளி குப்பைகளைத் தோற்றுவிக்கும்.தற்போதைய இந்த செயற்கைக் கோள் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. என்ற நான்கு கட்டங்கள் கொண்ட 260 டன் எடையுள்ள ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது.

வழக்கமாக ராக்கெட்டின் முதல் மூன்று கட்டங்கள் ஏவும் நடவடிக்கையின்போது புவியில் கழன்று விழுந்துவிடும். திரவ எரிபொருளை பயன்படுத்தும் ராக்கெட்டின் கடைசி கட்ட எஞ்சின் பல முறை, நிறுத்தி ஸ்டார்ட் செய்யப்பட்டு மிகத் துல்லியமான சுற்றுப் பாதைக்கு சென்று சேர உதவும்.

வியாழக்கிழமை கலாம் சாட்டை ஏவிய ராக்கெட்டில் பயன்படுத்தப்படும், இந்த நான்காம் கட்ட எஞ்சின், செயற்கைக் கோளை 277 கி.மீ. உயரத்தில் உள்ள சுற்றுப் பாதைக்குக் கொண்டு செல்லும். ஆனால், இந்தமுறை, இந்த எஞ்சினில் புதிய திறனை சேர்த்துள்ளது இஸ்ரோ. இதன் மூலம் இது விண்வெளியிலேயே ஓராண்டுக்கு செயல்பட்டுக்கொண்டிருக்கும்.

“விலைமதிப்பு மிக்க இந்த செல்வத்தை ஏன் வீணாக்கவேண்டும்? எனவே, இந்த நான்காம் கட்ட எஞ்சினை சோதனைக்கான மேலதிக உயரத்தில் உள்ள ஒரு சுற்றுவட்டப் பாதைக்கு செலுத்தி விண்வெளியில் சின்னச் சின்ன சோதனைகளை மேற்கொள்ள உள்ளோம்” என்றார் இஸ்ரோ தலைவர் சிவன்.

கிட்டத்தட்ட ஈர்ப்பு விசை பூஜ்யமாக உள்ள சூழலில் ஆராய்ச்சியாளர்கள் சோதனைகள் மேற்கொள்ள இது உதவும். இந்த சுற்றுப்பாதையில் இருந்துதான் கலாம் சாட்டும் செயல்படும்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *