உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று கூட வேண்டும் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கேட்டுக் கொண்டுள்ளார்
ஈரான் நாட்டின் அரசு தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் ஹசன் ரவ்ஹானி இது குறித்து பேசும் போது, அமெரிக்கா தமது மதத்திற்கும், அந்த மததிலுள்ள எதிர்கால தலைமுறையினருக்கும் எதிராக உள்ளது என்றும், நாம் நிச்சயமாக இவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கு எதிராக உலக இஸ்லாமியர்கள் ஒன்று கூட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், பயங்கரவாதத்திற்கு எதிராகவும், ஆக்கிரமிப்பு மற்றும் வல்லரசுகளுக்கு எதிராகவும் சவூதி அரேபிய மக்களுடைய நலன்களை பாதுகாப்பதற்கும் தாங்கள் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதை செய்வதற்கு தாங்கள் 450 பில்லியன் டொலர்களை எல்லாம் கேட்க மாட்டோம் என்றும் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி இதன்போது கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்துள்ளது அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியதுடன் அந்த நாட்டின் மீது பொருளாதரத் தடைகளையும் விதித்து வருகின்றார்.
ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிரித்தானியா, யேர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து அந்த ஒப்பந்தத்தில் தொடர்ந்தும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.