முக்கிய செய்திகள்

உலக நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தும் கருவியாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும்!

1067

உலக நாடுகளிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தும் கருவியாக தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு மன்றத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றின் சார்பில், தண்ணீர், அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவாதம் நடைபெற்ற போது அதில் இந்தியா சார்பில கலந்துகொண்ட ஐக்கிய நாடுகளுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 70 ஆண்டுகளில் 60 அனைத்துலக நீர்நிலைகள் தொடர்பாக உலக நாடுகளுக்கிடையே சுமார் 200 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

நீர்நிலைகள் ஒரு நாட்டு எல்லையைத் தாண்டி பாயும் போது, அனைத்துலக ஒத்துழைப்பு அவசியம் என்பதை அனுபவங்கள் உணர்த்தியுள்ளதாகவும், அத்துடன் ஒவ்வொரு நீர்நிலைக்கும் தனித் தனி குணாதிசயங்கள் உள்ளதாகவும் அவர் விபரித்துள்ளார்.

கடந்த 1947இல் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது ஆறுகளும் கிழக்கு மேற்கு என பிரிந்ததாகவும், இதையடுத்து ஆற்று நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக அண்டை நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதுடன், 1960இல் சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது என்றும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

மனித வாழ்வுக்கு தண்ணீர் அவசியம் என்பதனால், உலக நாடுகளுக்கிடையே தண்ணீர் பிரச்சினை தொடர்பாக மோதல் ஏற்படாது என்று கூறிவிட முடியாது எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதேவேளை உலக நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான கருவியாக தண்ணீரைப் பயன் படுத்த அனுமதிக்கக்கூடாது என்றும், இது தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக உலக நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றின் குறித்த விவாதத்தில் இந்தியாவின் கருத்துக்கு, பாகிஸ்தான் சார்பில் பதிலளித்து உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதி இவ்வாறு கூறியுளளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *