முக்கிய செய்திகள்

எகிப்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

416

எகிப்தில் 2013ஆம் ஆண்டு அதிபராக இருந்த மொஹமத் மொர்ஸி நீக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை சேர்ந்த நபர்கள் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டோர் மீதான வழக்குகளில் அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

75 பேருக்கு மரண தண்டனையும் 47 பேருக்கு ஆயுள் தண்டனையையும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த தீர்ப்பு ‘அநியாயமானது’ என்று கூறியுள்ள அனைத்துலக மன்னிப்புச் சபை, எகிப்து அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் விமர்சித்துள்ளது.

கெய்ரோவின் ரப்பா அல்-அடவியா சதுக்கத்தில் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பாதுகாப்பு படையினரால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

தற்போது நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும், வன்முறை தூண்டுதல், கொலை, சட்டவிரோத போராட்டங்கள் நடத்தியது ஆகியவற்றிற்காக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஆவர்.

75 பேருக்கான மரண தண்டனையானது கடந்த யூலை மாதம் விதிக்கப்பட்டு, தற்போது அது உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஒட்டுமொத்த வழக்குகளும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன.

தற்போது தடை செய்யப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் அந்த அமைப்பின் தலைவரான மொஹமத் படியும் ஒருவர்.

அத்துடன் பத்திரிகை ஒன்றின் விருது பெற்ற புகைப்படக் கலைஞரான மஹ்மூத் செய்துக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் கலைந்து கொண்டிருக்கும்போது புகைப்படம் எடுத்ததாக இவர் கைது செய்யப்பட்டார் எனவும், ஏற்கனவே வழக்கு விசாரணையில் இருந்தபோது 5 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டார் என்பதால், இவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *