முக்கிய செய்திகள்

எந்த நாட்டுடன் போர் புரிய இலங்கை அரசு 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்

572

வடக்கு மாகண மகளிர் அமைச்சுக்கு இன்றுவரை ஒரு சதமும் அரசாங்கம் ஒதுக்கவில்லை என்று வட.மாகாண சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறிருக்க இலங்கை அரசாங்கம் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 3 ஆயிரம் மில்லியன் ரூபாயை பாதுகாப்பிற்கு ஏன் ஒதுக்கியுள்ளது என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் மன்னார் பனங்கட்டுக்கொட்டு கிராமத்தை சேர்ந்த பெண்கள் சுய தொழில் அமைப்புக்களுடனான நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்ட பின்னர், குறித்த நிகழ்வின் இறுதியில்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இறுதிப் போரில் ஒரு இனத்தையே அழிப்புக்கு உள்ளாக்கி விட்டு, அதில் பாதிக்கப்பட்ட பெண்களை மீள் எழுச்சி அடையவிடாமல் தடுத்து, அவர்களுக்குரிய எந்த உதவியையும் செய்யாமல், இப்போது பாதுகாப்புக்கென 3 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் முடிநது 9 ஆண்டுகளின் பின்பு இந்த அரசாங்கம் எந்த நாட்டுடன் போர் நடத்துவதற்காக இந்த 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியிருக்கின்றது என்பதே எங்களுடைய மக்கள் எழுப்புகின்ற கேள்வியாக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீள் எழுச்சியை மக்களுக்கு ஏற்படுத்தாது இராணுவத்திற்கும் படை பலத்தை அதிகரிப்பதற்கும் ஒதுக்கும் பொழுது, நாடாளுமன்றத்தில் எங்கள் மக்கள் பிரதிநிதியாக இருக்கின்றவர்கள் இந்த வரவு செலவு திட்டத்தை ஆதரிக்கப் போகின்றார்களா அல்லது இதய சுத்தியுடன் எங்களுடைய மக்களை போரில் இருந்து மீண்டெழுகின்ற நிலைக்கு கொண்டு வர போகின்றார்களா என்று மக்கள் தான் வினவ வேண்டும் எனவும் அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *