முக்கிய செய்திகள்

எனது உயிருக்கு அச்சுறுத்தல் – முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

1208

தன்னைக் கொலை செய்வதற்கு தென்பகுதியில் சதித்திட்டம் தீட்டப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக, காவல்துறை விசாரணைகளை நடத்துமாறு இலங்கை சனாதிபதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரலாம் என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விடயத்தை இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு சென்று, விக்னேஸ்வரனுக்கு காவல்துறைப் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு கோரும்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் தாம் கோரியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த விக்னேஸ்வரன், அடிப்படைகள் இல்லாமல் இத்தகைய குற்றச்சாட்டை எழுத்து மூலம், பகிரங்கமாக வெளியிட்டிருக்க மாட்டார் என்பதனால், இந்த விடயம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த விடயத்தை இலங்கை சனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவுக்கு அனுப்பியிருந்த சிறப்புரையில், தனது உயிருக்கு உலை வைத்து விட்டு அந்தப் பழியை விடுதலைப் புலிகள் மீது சுமத்துவதற்கு தென்னிலங்கையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக, வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *