முக்கிய செய்திகள்

என்றும் நினைவில் நிற்பாய். மேஜர் கணேஸ்!!!

1921

தோழனே இன்று உன் நினைவுநாள்….
எப்போதும் அலைபாயும் ஒளிபொருந்திய கண்களுடன் 81ல் நீ அமைப்பில் இணைந்தாய். நீ இணைவதற்கு சிறிது காலம் முன்னம்தான் உன் பாடசாலை தோழன் சீலனும் ,உன் தோழன் புலேந்திரனும் அமைப்பில் இணைந்திருந்தார்கள்.
அந்த நாட்கள் எத்தனை இனிமையானவை.. சர்வதேச ஓநாய்களின் பாதைக்காக எதையும் வளைக்கவோ, எதையும் நாசுக்காக பொய்யாக சொல்லி போகவோ தேவையற்ற சத்தியபொழுதுகள்.எமக்கான போராட்டம் எமது எல்லைக்குள் எமது தலைவனின் வழிகாட்டலில் எமக்கே உரித்தான சத்திய பாதையில் அப்போது..
இனவெறியின், நிலப்பறிப்பின் அத்தனை கோரங்களையும் உன் மண்ணில் நீ கண்டுகொண்டே போராட்டத்துக்கு வந்ததால் அத்தனை உறுதியாக நின்றாய்.உறுதியுடனே வந்தவன்தான் நீ
நீ சேர்ந்தகாலத்தில் அமைப்பு ஒரு பெரும் அலையில் சிக்கி திணறி கொண்டிருந்த பொழுது.அரசியல் களத்தில் விடுதலைப்புலிகளை இல்லாது செய்ய தமிழர்கூட்டணியும். விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை அழித்துவிட சிங்களஅரசும் முனைப்புடன் செயற்பட்டிருந்த நேரத்தில் நீ வந்தாய்.
வெறுமனே முப்பதுக்கும் குறைவான தொகையில் இருந்த எமது உறுப்பினர் எண்ணிக்கை உன் வரவால் வெறுமனே ஒரு எண்ணிக்கையாக அதிகரிக்காமல் ஒரு பெரும் மனஉறுதியாக ஒரு பெரும் காப்பு அரணாக நீ சேர்ந்தாய்.
நாளாந்த உணவுக்கே மிகவும் சிரமமான இயக்க நிதிநிலைமை அப்போது.நிதி பொறுப்பாளர் பண்டிதர் ஒரு தாயின் தவிப்புடன் அலைந்து திரிவான். பண்டிதர் கொண்டுவந்து தரும் காசில் ஏதும் பொருட்கள் வாங்கித்தான் உலை வைத்தே ஆக வேண்டிய நிலை..
துலாகிணறுகளில் தண்ணீரை குடித்து விட்டு சைக்கிள் உளக்கி இயக்க வேலைகளாக நீ திரிந்தபடி இருப்பாய்.
உன்னுடனும் கிட்டு லிங்கம் அருணாவுடன் இளைவாலை வீட்டில் இருந்த காலங்கள் எத்தனை அருமையானவை தோழா..இருந்த வீட்டுக்காரருக்கு நாங்கள் சீமேந்து தொழிற்சாலையில் வேலை செய்பவர்களாக காட்டவதற்கே அதிகம் நடிக்க வேண்டி இருந்தது.
அவரும் அடிக்கடி கேட்பார் நீங்கள் சமைத்து சாப்பிடுவதை நான் காணவே இல்லை என்று .அந்த பாவிக்கு தெரியுமா சமைக்க ஏதும் எம்மிடம் இல்லை என்று..சிரித்தபடி சாமாளித்தவாறே இருப்பை அங்கு தொடர்ந்தோம்.
தோழா கணேஸ் நீ அமைப்புக்கு வந்து சேர்ந்து ஓரிரு நாளிலேயே சங்கருக்கு நெருக்கமான ஒரு தோழமை ஆனாய்.
உன்னுடைய ஆசான்களில் சங்கர் முக்கியமானவன். அவன்தான் உனக்கு இலக்கியங்களில் இருக்கும் உன்னதமான உறுதிநிறைந்த வீரம்செறிந்த தருணங்களை புத்தகங்களாக அறிமுகம் செய்தான்.அதிகாலையின் அமைதியில், மனிதனின் கதை போன்ற புத்தகங்களை எப்போதும் நீ எங்கு வீடு மாறி சென்றாலும் ஒரு கங்காரு தன்னுடைய வயிறறுடன் குட்டியை காவுவதுபோல கொண்டு திரிந்தாய்..
உனனுடைய முதல்தாக்குதலும் சங்கரின் தலைமையிலேயே அமைந்திருந்தது.
உன் மீது சத்தியநாதனுக்கு (சங்கர்) அத்தனை நம்பிக்கை. அந்த நேரத்தில் தாக்குதலுக்கு உன்னையும் ஒருவனாக இணைக்கிறான். தாக்குதலுக்கான கண்காணிப்பு தகவல் சேகரிப்புகளை மாத்தையா செய்கிறார்.
அப்போது இளவாலைவீட்டில் எம்முடன் இருந்த உன்னை அழைத்து போய் தாக்குதல் நடாத்த இருக்கும் இடம் பற்றி காட்டும்படி சொன்னபோது நீயும் வந்தாய்.அந்த நெல்லியடி சந்தி பகுதியை உனக்கு ஒருமுன்னிரவு பொழுதில் காட்டியபோது எவருமே கவனிக்காத பல விடயங்களை நீ சொன்’னபோது சங்கரும் பண்டிதரும் அற்புதமான ஒரு போராளி எம்முள் உருவாகி இருக்கிறான் என மகிழ்ந்தனர். ஆம், நெல்லியடியில் காவல்நிலையம் இல்லை, நெல்லியடிக்கு ராணுவம் வரவேணுமாக இருந்தால் வல்வெட்டித்துறை, தொண்டமானாறு,பலாலி முகாம்களில் இருந்தே வரவேணும்.குறைந்தது அரை மணித்தியாலம் முதல் ஒரு மணித்தியாலம்வரை ஆகும்.
தாக்குதலுக்கு மிகவும் சாத்தியங்கள் அதிகமான ஒரு பகுதி என்பது உன் கணிப்பு..
அங்கு வந்து எம்முடனேயே நீ நின்ற காலத்தில்தான் அப்போது எமது தீவிர வெளி உதவியாளனாக சேர்ந்திருந்த விசு, ராஜ்மோகன் ஆட்களை நீ சந்திக்கிறாய். நீ படிக்கும் புத்தகங்களை அவர்களுக்கு கொடுத்து அவர்களையும் உருவாக்க நீ முன்னுரை எழுதினாய்.
நெல்லியடி தாக்கதலுக்கு பிறகு சாவச்சேரி காவல்நிலைய தாக்குதல் என்று தொடங்கி நீ மரணிக்கும்வரை களமாடியபடியேதான் இருந்தாய்.தமிழிழுவிடுதலைப் போராட்ட வரலாற்றில் சிங்களத்தின் ஹெலிகப்டர் ஒன்றை சுட்டுவீழ்த்திய தாக்குதலை முன்னின்று வழிநடாத்தியவன் நீ….
தோழனே கணேஸ் உன்னுடன் மூதூர் கந்தளாய் வெருகல் என்று திரிந்த போராளிகளுடன் இன்றும் கதைக்கும்போது தாயின் பரிவுடன் நீ அவர்களுக்கு உணவு கொடுப்பதை இருப்பதை பகிர்ந்து கொடுப்பதை சொல்லி சொல்லி கலங்குகிறார்கள் தோழனே..
நீ பிராந்தியம் ஒன்றின் தளபதியாக வந்தபின்னர் உன்னுடன் தொற்றிக் கொண்ட குணம் அல்ல அது தோழனே. நீ அமைப்புக்கு வந்த பொழுதிலேயே உன்னுடன் இருந்தது இந்த பரிவும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத தோழமையும்.
நீ, கிடடு அருணா லிங்கம் என நாம் ஐவர் இருந்த இளவாலை வீட்டுக்கு தலைவர் ஒரு மதியம் கடந்து 3மணிக்கு வருகிறார்.ஒருவரும் சாப்பிட இல்லை என்பதை அறிகிறார்.தலைவரும் இரண்டு நாட்களாக பெரிதாக ஒன்றும் சாப்பிட இல்லை என்று அறிகிறோம்.. சமைப்பதற்கு அரசியை தவிர வேறு எதுவும் இல்லை.நாம் இருந்த வீட்டின் முற்றத்தில் நின்ற விலிம்பிக்காய் மரத்தின் காய்களை ஆய்ந்து வரச்சொல்லி அதில் ஒரு சொதி வைக்கிறார் தலைவர்.இருந்ததோ மூன்று சாப்பாட்டு தட்டுகள்.நீயும் தலைவரும் பிறகு சாப்பிடுவதாக சொல்லி மற்றவர்களை சாப்பிட வைக்கிறீர்கள்.உன்னுடைய இயல்பே அதுதான் தோழனே..
உன் வாழ்வில் நீ அழுது பார்த்தது சீலனின் மரணத்தின் போதே.. அதுவும் சில நொடிகள்தான்.பின் இறுகினாய். இறுகினாய்.. உடைக்க முடியாத உறுதி ஒன்றை நெஞ்சுள் ஏந்தினாய்.. உன் தோழன் சீலனின் போராட்ட வாழ்வும் வீரச்சாவும் உன்னை இன்னும் உறுதியாக்கின.
மக்களுடன் மக்களாக வாழ்வதிலும் அவர்களுள் ஒருவனாக நின்று போராடுவதிலும் நீ தனித்தன்மை வாய்ந்தவன்.இயல்பாகவே அந்நியோன்யமாக பழகும் உன் குணமும் அதற்கு ஒரு காரணம்.மக்களை காப்பதற்காகவே ஆயுதம் ஏந்தினோம் என்பதை தினமும் மெய்ப்பித்த புலி நீ. அது தெஹிவத்தை சிங்களபடை கொமாண்டோக்கள் கடத்தி சென்று காட்டுக்குள் வைத்திருந்த தமிழ்பெண்களை மீட்டதாகட்டும், மூதூரின் கிளிவெட்டிப்பகுதியில் சிங்களஅரசக்கு ஆதரவான கூலிப்படைகள் கடத்தி வைத்திருந்த மக்களை மீட்டதாகட்டும் எல்லாமே மக்களை காப்பதற்கானவையே தோழனே..
இதைப் போன்றதொரு நாளில் நீ நேசித்த உன் மண்ணில் எதிரிகளுடனான மோதலில் வீரச்சாவடைந்தாய் 31 ஆண்டுகளுக்கு முன்னம்.
இனப்பரம்பல் ரீதியாகவும், நிலஅமைப்பு ரீதியாகவும், சிங்களபடை முகாம் அமைந்திருந்த முறையிலும் ( 13 ராணுவ- விசேட அதிரடி படை முகாம்கள்) சாத்தியங்கள் குறைந்த ஒரு நிலத்தின் பொறுப்பாளனாக சென்றது நீ மக்களை மட்டுமே நம்பி தோழனே. அவர்களே உன்னை காத்தார்கள்.நீ அவர்களை காத்தாய்.
நீ மரணித்த போது அமைப்பு வெளியிட்ட அறிக்கை உன் போராட்ட வரலாற்றின் கனதியை சொல்லியபடி நின்றது.
இவனின் சாவு ஒரு இலையின் உதிர்வு அல்ல.. ஒரு மலையின் சரிவு என்று. எழுதி இருந்தது எத்தனை பொருத்தமான ஒன்று தோழனே..
ஒருநாள் இந்த மண் விடுதலை ஆகும். அதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது ..
தோழனே உன் தியாகமும் உன் அர்ப்பணமும் விடுதலைதேசத்தின் காற்றில் கலந்தே இருக்கும். அந்த வெருகல் ஆற்றங்கரையிலும், சம்பூர், கிளிவெட்டி கூனித்தீவு என அத்தனை அழகும் அப்போதுதான்முழுமை பெறும்.
– ச.ச.முத்து
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *