BREAKING NEWS

எமக்கு இழைக்கப்பட்ட ஓரவஞ்சனையின் நாள் பெப்ரவரி 4 – கறுப்பு நாள்.

2268

எமக்கு இழைக்கப்பட்ட ஓரவஞ்சனையின் நாள் பெப்ரவரி 4 – கறுப்பு நாள்.

சிறீலங்காதேசத்தின் சுதந்திரதினத்தை கொண்டாடும் சிங்களமக்களுக்கு.
———————————————————————————–

சிறீலங்காதேசத்தின் சுதந்திரதினத்தை கொண்டாடும் சிங்களமக்களுக்கு தமிழீழமகனின் கடிதம்!!

எழுபதாவது சுதந்திரதின கொண்டாட்டங்களில் மூழ்கிப்போய் இருக்கும் சிங்களதேசத்தவனே உன் பக்கத்து தேசத்தவனின் மடல் இது.
வாள் ஏந்திய சிங்ககொடியை தூக்கிஆட்டுவதில் காட்டும் களிப்பை கொஞ்சம்குறைத்து இந்த மடலை படிப்பாய் என்றே நம்புகிறேன்.

உயிரினங்கள் அனைத்தும் பிரியமான-மிகமிக விருப்பமான ஒரு சொல் இருக்குமாக இருந்தால் அதுதான் ‘சுதந்திரம்” விடுதலை’ என்பன.

உன்னுடைய சுதந்திரதினத்தை நீ கொண்டாடுவதில் எமக்கேதும் வருத்தமில்லை- காழ்ப்பும் இல்லை.

காலிமுக கடற்கரையில் உன் முப்படைகளையும் கொண்டு நிலமதிர அணிவகுப்பிடு.
சிங்கள தேசிய உடுப்பு உடுத்திய உன் தேசத்து அதிபர் உரைக்கு கைதட்டு.

யாரிடமோ திருவோடு ஏந்தி வாங்கி குவித்து வைத்திருக்கும் ஆயுதங்களின் பளபளப்பில் துட்டகைமுனுவை நினைவிருத்து.!இது எல்லாம் செய்!!.

உன் சிங்களதேச சுதந்திரதினம்.அதில் என்ன கூத்ததடித்தாலும் எமக்கு குறைவேதும் இல்லை-குற்றமும் இல்லை.

ஆனால், பக்கத்து தேசமான தமிழீழமெங்கும் ராணுவமுற்றுகைகளுக்குள்ளேயே எப்போதும் இருக்க வேண்டும் என்று நீ விரும்பிக்கொண்டிருக்கிறாய்பார், அதுதான் எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஆனால் நீ தென்னிலங்கையில் ஏற்றும் அதே சிங்ககொடிதான் தமிழர்மண்ணிலும் ஏறியே ஆகவேண்டும் என்று நீ அடம்பிடிக்கிறாய்பார் அதுதான் எம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை- ஒருபோதும்

இன்று நீ சுதந்திரதினமாக கொண்டாடும் இந்த நாள் எமது வரலாற்றிலும் முக்கியமானது தெரியுமா..
இந்த நாளில் (04 பெப்) இருந்துதான் தமிழர்கள்மீதான இனப்படுகொலை ஆரம்பித்தது.

இந்த நூற்றாண்டின் மிகவும் கொடிய குரூரமான இனப்படுகொலையை எம்மீது நடாத்திவிட்டு ஒன்றுமே நடவாத மாதிரி சிங்களதேசமக்கள் நடப்பதைத்தான் எம்மால் ஜீரணிக்கமுடியவில்லை.

லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று புதைத்து சிதைத்து எரித்ததன் குறியீடாக தமிழர்கள் பெருஞ் சோகத்துடன் நினைவுகொள்ளும் மே18 என்பதை வெற்றிநாளாக குதூகலிக்கும் சிங்களதேசத்தின் சுதந்திரதினத்தை உண்மையாகவே நாம் வெறுப்புடனும் வன்மத்துடனுமே பார்க்கிறோம்-

அதனால்தான் இந்த நாளை நாம் கரிநாளாக, துக்கநாளாக எமக்கு இழைக்கப்பட்ட ஓரவஞ்சனையின் நாளாக நினைக்கின்றோம்.

உனக்கு தெரியுமா…எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே இந்த நாளை நாங்கள் எவரும்’ மனம் ஒத்து கொண்டாடியதில்லை என்று.
எரிந்தும் கரிகியும் கிடந்த சிங்ககொடிகள்தான் என் வீதிகளில் கிடக்கமுடியும் என்பதில் இருந்தே ஒன்று புரியவில்லையா உனக்கு.
சிங்களதேசத்தின் சிங்ககொடி தமிழர்தாயகத்தில் ஆயுதபடைகளின் துணையின்றி ஒருநிமிசம் கூட பறக்கமுடியாது என்ற யதார்த்தத்தை நீ ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறாய் என்று தெரியவில்லை.

கொஞ்சம் வரலாற்றை பின்னோக்கி பார்….
முதலில் ஒன்று உனக்கு தெரியுமா…எங்களின் தாயகஇறைமை ஒருபோதும் நாம் சிங்களஇனத்திடம் ஒப்படைத்ததே இல்லை.
அது ஐரோப்பிய காலனி ஆதிக்க கடவுள்கள் செய்தவினை.

ஐரோப்பியர் இந்த தீவுக்கு வந்தபோது இங்கு ஒன்றும் சிங்களராஜ்யமே தீவு முழுவதும் இருந்ததில்லை.

அந்த காலம் உலகம் முழுதும் இருந்த ஆட்சிமுறையான மன்னர்ஆட்சியில் நீங்கள் சிங்கள மன்னர்களாலும்இ நாங்கள் எமது மொழிபேசும் தமிழ்மன்னர்களாலுமே ஆளப்பட்டு வந்தோம்.
ஒரு தீவுக்குள் இரண்டு தேசங்கள்.
1619ல் போத்துகேசியர்கள் சங்கிலியனை வென்றபோதும்கூட எமது தமிழ்தேச இறைமை அவர்களிடம் இலகுவாக வீழ்ந்துவிடவில்லை.
வருணகுலத்தான் போன்றவர்கள் தஞ்சை நாயக்கமன்னர்களிடம் இருந்து உதவி பெற்று தமிழ்தேச இறைமையை தக்க வைப்பதற்காக போரிட்ட வரலாறுகளும்இ பண்டாரவன்னியன் போரிட்ட வரலாறுகளும் எமக்கும் உண்டு.

தமது நிர்வாக வசதிக்காக இந்த தீவு முழுதையும் ஒன்றாக்கிய ஆங்கிலேயர் தாம் வெளியேறும்போது அதனை உங்களிடம் ஒப்படைத்து சென்ற வரலாற்று துரோகத்தால்தான் நானும் நீயும் ரத்தம் சிந்துகின்றோம் தெரியுமா.. நிற்க

இலங்கைதீவின் சுதந்திரத்துக்காக உன் முப்பாட்டனும், பாட்டனும் போரிடாவிட்டாலும் உலகெங்கும் ஏற்பட்ட அழுத்தங்களால் போகிற போக்கில் பக்கிம்காம்அரசி தூக்கி எறிந்த சுதந்திரபிச்சை உன் சிங்களதலைவர்களின் திருவோட்டில் விழுந்ததுதான் இன்றைய பிரச்சனைகளுக்கு கால்.

அதுவரை பதுங்கி இருந்த சிங்களபேரினவாத பேய் 04.02.48க்கு பின்னரே வெளிவந்து விசுவரூபமெடுத்து விசரெடுத்து ஆடத்தொடங்கியது.

உன் மூளையின் ஒவ்வொரு திசுக்களிலும் மகாவம்ச கனவை ஊட்டியும் ஊற்றியும் வளர்த்தெடுத்த சிங்களபேரினவாதம் தமிழர்களை அடக்கி ஆள்வதுதான் சிங்களஇனத்தின் இருத்தலுக்கு மிகமுக்கியம் என்ற சேதியை எப்படியோ பதியம் போட்டுள்ளது.

நீயும் யார் தமிழர்களை அதிகமாக அழிக்கிறார்களோ அவர்களையே வாக்களித்து தெரிவுசெய்து பேரினவாத சேற்றுக்குள் சங்கமித்தாய்.

தமிழர்கள் தொடர்ச்சியாக அடக்கப்படுவதும் அழிக்கப்படுவதும் உனக்கு உறைக்காமல் விட்டாலும் எமக்கு உறைத்தது.
அதனாலேயே எமக்கே உரித்தான எம் தாய்மண்ணில் எம் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட எழுந்தோம். விடுதலைக்கான எழுச்சியானது அது.!!

எல்லா அடக்குமுறைகளும் ஒடுக்குதல்களும் எவ்வளவு வலிகளை தந்தாலும் வரலாறு அதில் இருந்து விடுதலை ஆக ஒரு சக்தியை வழங்கும் என்பது பொது விதி அல்லவா…

எமக்கும் ஒரு தலைவன் கிடைத்தான்.
யாருக்குமே கிடைக்காத ஒரு நேர்மையான உண்மையான வழிகாட்டி ஒருவன் கிடைத்தான்.

முப்பதாண்டுகள் அவன் நடாத்திய உன்னதமான போராட்டம் சிங்களமகனே உனக்கு எத்தனை சேதி சொல்லியும் நீ இன்னும் அதிலிருந்து கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் வரலாற்று சோகம் போ.!!

உதாரணத்துக்கு ஒன்று, சிங்களபேரினவாத ஆட்சி மையத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் களத்தை திறந்தது சிங்களம்.
ஆனால் தமிழர்போராட்டம் சிங்களபேரினவாத ஆட்சிமையத்தின் மூளைமடிப்புகளுக்குள்ளும் அதிர்வுகளை பொறிகளை உருவாக்கி சிங்களம்முழுதையும் அச்சத்தில் வைத்திருந்த காலத்தை எப்படித்தான் அத்தனை சுலபமாக மறந்தாயோ தெரியவில்லை.

“தமிழர்களுக்கான சுதந்திரம்தான் சிங்களமக்களுக்கான உண்மையான சுதந்திரமாக இருக்கமுடியும்” என்று எங்கள் தேசியதலைவன் சொன்னதன் அர்த்தத்தை நீ எப்படி புரிந்துகொண்டாயோ தெரியவில்லை…

ஒரே தீவுக்குள் இன்னொரு தேசத்தை அடிமையாக அடக்கி வைத்திருக்கும்வரைக்கும் உண்மையான சுதந்திரத்தினை சிங்களமக்களும் அனுபவிக்கமுடியாது என்பதுதான் முப்பதாண்டு போராட்டம் சிங்களஇனத்துக்கு சொல்லிய வரலாறு.

வரலாற்றில் எப்போதாவது அரிதாக நிகழும்
போர்க்கள வாய்ப்பு,
துரோகத்தின் கூட்டு,
மேலாதிக்க ஒத்துழைப்பு,
சர்வதேச ஒத்துழைப்பு என்பன ஒன்றாக இணைந்ததால் கிடைத்த தற்காலிக வெற்றியையே முழுமையானதாக, நிரந்தரமானதாக எண்ணிக் கொண்டிருக்கும் சிங்களமகனே….

அந்த பெரும் இனவழிப்பு நாட்களான 2009 மே 18ல் கூட எமது போரிடும்வலு,ஆளணி,தளபாடங்கள் என்பனவற்றை இழந்திருக்கிறோம் உண்மைதான்.

ஆனால் தமிழர்தாயக இறைமை என்பதை எந்தவொரு இடத்திலும் உங்களிடம் சரணாகதி வைக்கப்படவில்லை.
எல்லா காலங்களிலும் வரலாறு அடக்கு முறையாளனுக்கு சாதகமாவே இருந்தது கிடையாது.

அடக்கப்பட்ட மக்களும் எப்போதும் தூங்கிக் கிடப்பார்கள் என்பதும் கிடையாது.

சிங்களதேச சுதந்திரநாளுக்காக சிங்ககொடியை ஆட்டியபடியே கூவிக்குதூகலிக்கும் சிங்களகுடிமகனே,
கொஞ்சம் நிதானமாக சிந்தித்து பார்.யாரோ கண்டிப்பிரபுத்துவ பண்டாரநாயகாக்களுக்காகவும், சேனநாயக்காகளுக்காகவும்இராஜபக்சே குடும்பத்துக்காகவும் மைத்திரிக்காகவும் ரணிலுக்காகவும் நீ ஆயுதம்ஏந்தி எம் மண்ணில் இன்னும் எத்தனை காலம்தான் நிலைகொண்டு நிற்கபோகிறாய்….

உலகவரலாறுகளை புரட்டிப்பார்.
உலகம் முழுதும் சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை வைத்திருந்த சக்ரவர்த்தினி பக்கத்து நாடாக இருந்த போதிலும் எழுந்தார்களே அயர்லாந்தின் தான்பிரின்கள் அவர்கள் எப்படி எழுந்தார்கள் என்பதையும்,
மேலும் உலகமுழுதும் எழுச்சி கொண்ட மக்களின் வரலாறுகளையும் புரட்டிப்பார் …

ஏன் அதிகதூரம் போகிறாய்.. உன் பக்கத்திலேயே..மிக பக்கத்திலேயே பார்.
பொன்னம்பலம் ராமநாதன்களை கண்டுபழகி போட்ட தப்புகணக்கால் தமிழர்கள் சலுகைகளையே யாசிப்பர், போரிடவே மாட்டார்கள் என்ற கனவுடன் தூங்கிக்கிடந்த சிங்களபேரினவாத கனவுகலைத்து யதார்த்தத்தை தீயாக பொசுக்கி புரியவைக்க ஒருவன் பிறப்பான் என்பதை சேனநாயகாவும் பண்டாவும் ஒருபோதும் கனவுகூட கண்டிருக்கமாட்டார்கள்தான்.

ஆனால் நடந்தது என்ன என்பதை நீ உன் கண்ணாலே கண்டும் கேட்டும் இருப்பாய்.
எனவே இப்போதே ஆதிக்க எண்ணம் கலை.
உனக்கு பாதுகாப்பு அளித்து அருள் தருவதற்காகவே சங்கமித்தையால் அசீர்வதிக்கப்பட்டதாக பீற்றிய உன் சிங்களதேசத்து ஆட்சியாளர்கள் உன் தெருக்களிலேயே வீழ்ந்து கிடந்த பொழுதுகள் ஒன்றும் தற் செயலானது அல்ல..
உன் சிங்களதேசத்தின் அதி புனிதமான மையம் என்றும் உன் மன்னர்களும் மந்திரிகளும் பிரதமர்களும் சனாதிபதிகளும் வீழ்ந்து வணங்கி நின்ற தலாதவ மாளிகாவும் ஒரு நாள் தீப்பற்றி எரிந்தது என்பதும் புத்தரின் புனித பல்லை தாங்கும் பேழையை பாதுகாக்கும் தியவதன நிலம கூட அன்று ஓடி ஒளித்ததும் வரலாற்றில் படித்து புரி சிங்கள தேசத்தவனே
உனக்கு இருக்கும் சுதந்திரதேசம் போல ஒன்று தமிழர்களுக்கும் இருக்கு என்ற யதார்தம் புரி.
உன்மீது சவாரி செய்யும் சிங்கள ராஜபக்சேகளை மைத்திரிகளையும் தூக்கி எறி.!!
மீண்டும் சொல்கிறேன்….எங்களின் தேசியதலைவன் சொன்னதுபோல ‘ தமிழர்களின் சுதந்திரம்தான் சிங்களமக்களுக்கான உண்மையான சுதந்திரமாக இருக்கமுடியும் என்பதன் அர்த்தத்தை புரிந்துகொள்.
இந்த தீவில் நிரந்தர சமாதானமும் சுபீட்சமும் பொங்க அதுவே முடிவாகும்.
அதுவரை உன் சுதந்திரநாள் எமக்கு துக்கநாள்தான்.உன் சுதந்திரநாளை எம்மீதான இனப்படுகொலை ஆரம்பித்த நாளாகவே பார்ப்போம்.
சந்திப்போம்…
தமிழீழத்தவர்களில் ஒருவன்
– ச.ச.முத்து –
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *