முக்கிய செய்திகள்

எமது உரிமைகளையும், நிலங்களையும் பறித்து வைத்துக்கொண்டுள்ளோர் எம்மை விலைகொடுத்து வாங்கப் பார்க்கின்றார்கள் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்

393

எமது உரிமைகளையும், நிலங்களையும் பறித்து வைத்துக்கொண்டுள்ளோர் எம்மை விலைகொடுத்து வாங்கப் பார்க்கின்றார்கள் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காணிவிடுவிப்பை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை இன்று சந்தித்து பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மக்களுடைய நிலங்களை பெற்றுத்தரவேண்டும் என்று தாங்கள் உறுதியாக இருப்பதாகவும், ஆனால் எப்படியாவது அந்தக் காணிகளை திருப்பி தரக்கூடாது என்ற எண்ணத்தில் இல்ஙகை அரசாங்கம் இருக்கின்றது எனவும், இந்த நிலையில் இதுவரையில் எமக்கு வெற்றி கிட்டவில்லை என்ற போதிலும், இந்தப் பிரச்சினையை உலகறிய செய்திருக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரச்சனைகளை பார்த்தால், இலங்கையில் தமிழ் மக்களுக்கு காலாகாலம் இருக்கும் பிரச்சினைகள் போலத்தான் இதுவும் என்பதையும் சுட்டிக்காட்டியுளள அவர், தரவேண்டிய காணிகளை விடுவிக்காமல் வைத்துக்கொண்டு அதை எடுங்கள் இதை எடுங்கள் என்றுதான் கூறிக்கொண்டு இருக்கிறார்கள் தவிர, எமக்கு தேவையான -எமக்கு உரித்துடைய – எமது பழம்பெரும் காணிகளை – நாம் பலகாலமாக பாதுகாத்துவந்த காணிகளை பிடித்துவைத்துக்கொண்டு தர மறுக்கின்றார்கள் எனவும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இதேபோலத்தான் தமிழ் மக்களின் பிரச்சினைகளை காலாகாலமாக தீர்த்துவைக்காது, அவர்களுடைய அரசியல் ரீதியான உரிமைகளை தீர்வுக்களை பெற்றுக்கொடுக்காது, அதைத்தருகின்றோம் இதைத்தருகின்றோம் கொஞ்சம் குறைத்து தருகின்றோம் என்று பேரம்பேசிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களுக்கு தரவேண்டிய காணிகளை பிடுத்து வைத்துக்கொண்டு தராது மறுக்கின்றார்கள் எனவும், அதேபோலத்தான் வடக்கு கிழக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தமிழ் மக்களுடையது அந்த நிலங்களை பறித்து வைத்துக்கொண்டு – அது சம்பந்தமான உரிமைகளை பறித்து வைத்துக்கொண்டு பேரம் பேசி எம்மை பணம் கொடுத்து வாங்க பார்க்கின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுளு்ளார்.

எனினும் காணிகளை இழந்த மக்கள் தமது உரித்துக்களை விட்டுக்கொடுக்காது போராடி வருவதை வரவேற்பதாகவும், அதேபோலத்தான் அனைத்து தமிழ் மக்களும் தமது உரித்துகளை விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்றும், அந்த உரித்துக்கள் கிடைக்கும் வரை நாம் குரல்கொடுத்து கொண்டிருப்போம் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *