எமது விடயத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் – காணாமல்போனோரின் உறவுகள்

297

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் அமெரிக்கா தீர்வினை வழங்க வேண்டுமென வலியுறுத்தி, வவுனியாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவில் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

வவனியா கந்தசாமி கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அங்கிருந்து 694 ஆவது நாளாக தாம் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதனை நினைவு கூர்ந்தும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை தாங்கியவாறும் கடை வீதி வழியாக பேரணியாக சென்றனர்.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது வைத்தியசாலை சுற்றுவட்டத்தின் ஊடாக போராட்ட தளத்தினை அடைந்ததும், அங்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘இதன்போது சர்வதேச வழிமுறையில் எமது காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளை மீட்க அமெரிக்காவை அழைக்கின்றோம்’ என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும், ‘அமெரிக்காவே வா’ என்ற கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்திற்கு முன்பும், யுத்தத்தின்போதும், யுத்தத்திற்கு பின்னரும், இலங்கை இராணுவத்தினரால் பலர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர்.

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தறுமாறு வலியுறுத்தி தமிழர் தாயகப் பகுதியெங்கும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *