எம்மை நாமே ஆளக்கூடிய நிலைமை ஏற்படும் வரையில் எமது உரிமைக்கான குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

380

இலங்கை நாட்டின் பூர்வீகக் குடிகள் தமிழ் மக்கள் என்பதையும், அவர்கள் இன்று ஒடுக்கப்பட்ட ஒரு சிறுபான்மை இனமாக வாழவேண்டி வந்துள்ளது என்பதையும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரும்பான்மை இனத்தவர்கள் கூறுகின்ற அனைத்து விடயங்களுக்கும் தலையாட்டிப் பொம்மைகளாக தலையாட்டிக்கொண்டு தமிழ் மக்கள் வாழ வேண்டுமென்றே இல்கை அரசு எதிர்பார்க்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்த அரச சார்பற்ற அமைப்பின் நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாம் எமது ஒவ்வொரு தேவைகளையும் போராடிப் பெறவேண்டிய சூழ்நிலையிலேயே இன்று இருக்கின்றோம் எனவும், தமிழர்கள் கைகட்டி வாய்பொத்தி இருக்கவேண்டும் எனவும், இல்லையேல் அவர்கள் அனைவரையும் அண்டை நாடுகளுக்கு துரத்திவிடவேண்டும் என்று இலங்கை நாடாளுமன்றத்திலும் வெளியிலும் சிலர் கூச்சல் போடுகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கைகள் எடுப்பதில்லை எனவும், ஆனால் தற்செயலாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் ஏதோ கூறிவிட்டார் என்பதற்காக அமைச்சுப் பதவிகள் பறிப்பு, குற்றத் தடுப்புப் பிரிவின் விசாரணைகள் என்று அனைவரும் இணைந்து கொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள் எனவும் அவர் சாடியுள்ளார்.

இவ்வாறான நிலைகள் தொடரக்கூடாது எனவும், நாங்களும் இந் நாட்டின் இறைமையுள்ள குடிமக்களாக, எமது பிரதேசங்களில் எம்மை நாமே ஆளக்கூடிய முறையில் வாழ வழியிடப்பட வேண்டும்எனக் கோரினால் நாங்கள் பிரிவினை கோருகின்றோம் என்று ஒப்பாரி வைக்கின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தொடர்ச்சியான இவர்களின் அழுத்தங்கள் ஒருநாள் ஓய்வுக்கு வரும் எனவும், அதுவரை எமது உரிமைக்கான குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *