முக்கிய செய்திகள்

எழுவர் விடுதலையை இனியும் தமிழக ஆளுநர் தாமதப்படுத்தினால் தமிழகம் பெரும் போர்க்களமாக மாறும் என்று சீமான் எச்சரித்துள்ளார்

686

எழுவர் விடுதலையை ஆளுநர் இனியும் தாமதப்படுத்தினால் தமிழகம் பெரும் போர்க்களமாக மாறும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகியோரை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகச் சிறைக்கொட்டடிக்குள் வதைப்பட்டுக் கொண்டிருக்கிறனர் என்று விபரித்துள்ளார்.

இந்த நிலையில் அவர்களின் விடுதலைக்கு தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒன்றரை மாதங்களைக் கடந்துள்ள போதிலும், அது குறித்தான எந்தவொரு முடிவையும் ஆளுநர் அறிவிக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக ஆளுநரின் இத்தகைய நடவடிக்கை தாங்கொணாத் துயரத்தையும், பெரும் ஆற்றாமையையும் தருகிறது என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

மரணித்த ராஜீவ் காந்தி ஒரு அரசியல் பெருந்தலைவர் என்பதினாலேயே இக்கொலை வழக்கில் பெரும் அரசியல் சூழ்ச்சிகளும், சதி வலைகளும் பின்னப்பட்டு மாபெரும் அநீதி இழைக்கப்பட்டு ஏழு தமிழர்களும் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைக்கம்பிகளுக்கு நடுவே வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை வளையம் உண்மையான குற்றவாளிகளை நோக்கி விரிவடையவுமில்லை; விசாரணையானது முழுமையாக நிறைவடையவுமில்லை என்ற குற்றச்சாட்டையும் இதன்போது அவர் முன்வைத்துள்ளார்.

இதன் மூலம் மக்களின் கூட்டு மனசாட்சிக்கும், பொதுப்புத்திக்கும் இரையாக்கப்படவே, ஏழு தமிழர்களும் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதனைப் பல்வேறு தருணங்களில் எடுத்துரைத்துவிட்டோம் என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விபரித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *