முக்கிய செய்திகள்

ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கே தமிழர்கள் தொடர்ந்தும் வாக்களிக்கின்றனர் – அருட்தந்தை சக்திவேல்

254

காலத்திற்கு காலம் தீர்வு கிடைத்துவிடும் என கூறி ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கே தமிழர்கள் தொடர்ந்தும் வாக்களிக்கின்றார்கள் என சமூக செயற்பாட்டாளரும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளருமான அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2018ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடந்த ஆட்சி அதிகாரம் தொடர்பான இழுபறி நிலை 2019ம் ஆண்டிலும் தொடரத்தான் போகின்றது. அதிலும் இந்த ஆண்டு தமிழர்களிற்கு எதிரான ஒரு ஆண்டாக தெற்கு சமூகம் பாவிக்கப்போகின்றது. என்கின்ற செய்தியோடு 2019ம் ஆண்டு தமிழ் மக்களை பொறுத்தவரை இரண்டு வகையில் இது முக்கியமான ஆண்டாகும். முள்ளிவாய்க்கால் அவலத்தின் பத்தாவது ஆண்டாகவும், பயங்கவாத தடைச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 40வது ஆண்டில் காலடி வைக்கின்றோம்.

கடந்த நாற்பது ஆண்டுகாலமாக தமிழ் மக்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்ததும் மாத்திரமல்ல அதுவே தமிழ் மக்களுடைய அரசியலையும். தமிழ் மக்களின் இருப்பையும், தமிழ் மக்களின் எதிர்காலத்தையும் சிறைக்குள் தள்ளியது என கூறினாலும் அது மிகையாகாது. இந்த அவலங்களோடு நாம் 2019ம் ஆண்டு காலடி வைத்திருக்கின்ற இந்தச்சூழலில் மன்னாரில் தொடர்ச்சியாக எலும்புக்கூடுகளை தோன்டி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

2009ம் ஆண்டு நாங்கள் சடலங்களை கண்டோம், தற்போது நாங்கள் எலும்புக்கூடுகளை காண்கின்றோம். இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார். இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களிற்கு தற்போது அதிகாரம் கையளிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. இது தமிழர்களிற்கு இந்த நாட்டில் எதிர்காலம் இல்லை என்கின்ற செய்தியைதான் சொல்கின்றது.

யார் இந்த யுத்தக்குற்றங்களிற்கு காரணம் என அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்களோ, அவருக்கு இராணுவத்தில் பாரிய அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதனால் இந்த அரசாங்கம் தமிழர்களிற்கு கூறும் செய்தி என்ன?.

அதாவது நீங்கள் எங்களிற்கு எதிராக செயற்பட்டீர்கள். தற்போது உங்களிற்கு எதிராக செயற்படுவதற்கு நாங்கள் எல்லா வகையிலும் தயாராகி விட்டோம் என்ற செய்தியையே ஜனாதிபதி கூறி நிற்கின்றார். அது மாத்திரமல்ல மகாவலி எல் வலையம் என்பதற்கூடாக காணிகளை அபகரிப்பதற்கு திட்டமிடுகிறார். ஆதை போன்றே தொல்பொருளியல் திணைக்களம் அபகரிக்கின்றது.

வனஇலாகா திணைக்களமும் காணிகளை அபகரிக்கின்றது. அதற்கும் மேலாக மீன்பிடித்துறை அமைச்சர் கரையோர பிரதேசங்கள் எல்லாவற்றையும் கையகப்படுத்துகின்றார். இந்தநிலையில் வடக்கிலே நடைபெற்று வருகின்ற இன அழிப்பு தொடர்பாக சிவில் அமைப்புக்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழ் மக்களினுடைய போராட்டங்களை சிதைப்பதற்கு திட்டமிட்டு செயற்படுகின்ற அரசியல் கட்சிகளும் இருக்கின்றன. அதேபோல் வெளியில் இருந்து பணம் உழைக்கின்ற அமைப்புக்களும் இருக்கின்றன. அவர்கள் தங்களுடைய கைகளிலே போராட்டங்களை எடுக்கின்றார்கள் இடைநடுவிலே கைவிட்டு விடுகின்றார்கள்.

இது அவர்களுடைய அரசியலுக்கானது. இதன் காரணமாகத்தான் எமது போராட்டங்கள் சிதைந்து போய் இருக்கின்றன. இந்த சிதைவுக்கு காரணம் தெற்கு அரசியல் மாத்திரமல்ல எங்களுடைய தமிழ் அரசியல் தலைமைகள் என கூறிக்கொள்பவர்களும் இதற்கு காரணமாக இருக்கின்றார்கள். ஆகவே மக்களிற்கு தெளிவுபடுத்தி மக்களை கட்டியெழுப்புவதன் மூலமாகவே எமக்கான எதிர்காலம் இருக்கின்றது“ என தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *