முக்கிய செய்திகள்

ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது மனித உரிமை மீறல் என்று ராமதாஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்

417

ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது, எழுவரின் விடுதலை உரிமையைப் பறிக்கும் செயல் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தமிழக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் மாளிகை இன்று வரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தின் உணர்வு சார்ந்த விவகாரத்தில் மாநில அரசின் பரிந்துரையை மதிக்காமல் ஆளுநர் மாளிகை அலட்சியமாகச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய எழுவர் விடுதலை குறித்த வழக்கில் செப்டம்பர் 6 ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, 7 தமிழர் விடுதலை குறித்து அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று ஆணையிட்டுள்ளதையும் அவர் கோடிட்டுக்காட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தமிழக சட்டசபையில் தீர்மானம் எடுக்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இன்றுடன் இரண்டு மாதங்கள் நிறைவடையும் நிலையில், 7 தமிழர்கள் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகை இன்னும் தாமதிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் இனியும் தாமதிக்காமல் ஆளுநர் முடிவெடுத்து அவர்களை விடுதலை செய்ய ஆணையிட வேண்டும் என்றும், தமிழக ஆட்சியாளர்களும் இந்த விடயத்தில் தங்கள் கடமை முடிந்ததாகக் கருதி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் ஆளுநர் மாளிகைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *