முக்கிய செய்திகள்

ஏழு வயது மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

132

வவுனியா ஓமந்தை காவல்துறை பிரிவிற்குட்பட்ட நவ்வி பகுதியில் ஏழு வயது பாடசாலை மாணவன் நேற்றுமுன்தினம் கிணற்றிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், சிறுவனின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், அவரின் மரணத்திற்கு நீதி வேண்டும் எனத் தெரிவித்து கிராம மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததனர்.

சிறுவன் கடந்த ஒன்பதாம் திகதி மதியம் இரண்டு மணியளவில் வீட்டிலிருந்து தனியார் வகுப்புக்குச் செல்வதாகத் தெரிவித்துவிட்டு அயல்வீடொன்றிக்கு விளையாடச் சென்றுள்ளார்.

இந்நிலையில், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுது அவரைக் காணவில்லை என ஓமந்தை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.

மறுநாள் காலை அயல்வீட்டுக் கிணற்றில் இருந்து சிறுவன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதுடன் சிறுவனின் புத்தகப்பை கிணற்றிற்கு அண்மையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, உயிரிழந்த சிறுவனுடன் விளையாடிய அயல்வீட்டுச் சிறுவனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் முரணான தகவல்களை அவர் தெரிவித்திருந்தார்.

முகமூடி அணிந்த ஒருவர் மோட்டார் சைக்களில் வந்து சிறுவனை தூக்கிச் சென்றதாக முதலில் தெரிவித்ததுடன், விளையாடிக் கொண்டிருந்தபோது தவறுதலாக கிணற்றில் விழுந்ததாக பின்னர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த சிறுவன் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், ஓமந்தை காவல்துறையினரால் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த சிறுவனின் இறுதிகிரியைகள் நவ்வி பகுதியில் அமைந்துள்ள வீட்டில், இன்று காலை இடம்பெற்று சடலம் சமளங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதன்போது, கிராமத்தில் ஒன்றுகூடிய பொதுமக்கள் வீதியில் சடலத்தினையும் பதாதைகளையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்த அவர்கள், உண்மைதன்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *