ஐக்கிய தேசியக் கட்சியையும் அதன் தலைவரையும் பாதுகாப்பதற்காக நீதிமன்றம் சென்ற கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்காக நீதிமன்றம் போகாதது ஏன் என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்

375

நாட்டில் சனநாயகத்தை பாதுகாப்பதற்காக என்று கூறி நீதிமன்றம் சென்று நல்ல தீர்ப்பை பெற்றுக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளதாக தம்பட்டம் அடிக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்ற போது அதனைத் தீர்ப்பதற்கு ஏன் நீதிமன்றம் செல்லவில்லை என்று ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவர் அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் மக்களுடைய பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே இருக்கின்றது என்பதையும், நீதிக்காக இன்றைக்கும் தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியள்ளார்.

ஆனால் தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகள் இந்த மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கோ, நிதிக்காக போராடும் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஆனால் சனநாயகத்தை நிலை நாட்டுவதற்காக என்று கூறி, ஐக்கிய தேசியக் கட்சியையும் அதன் தலைவரையும் பாதுகாப்பதற்காக நீதிமன்றம் சென்றனர் எனவும் தெரிவித்துள்ள அவர், இப்போது நீதியும் கிடைத்து உள்ளதாகவும் கூறுகின்ற கூட்டமைப்பினர் தமிழ் மக்கள் விடயத்தில் ஏன் அவ்வாறு செயற்படவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு தற்போது நீதிமன்றம் ஊடாக நீதி கிடைத்திருப்பதாக கூறுகின்றவர்கள், தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கும் அவ்வாறு நீதிமன்றம் சென்று நீதியைப் பெற்றுக் கொடுப்பார்களா எனவும் அவர் வினவியுள்ளார்.

இன்றைய அரசியல் நெருக்கடியில் கூட்டமைப்பின் செயற்பாடுகள் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கின்றது என்றும், கூட்டமைப்பின் வகிபாகம் நிச்சயம் இவர்களது முகத்திரையைக் கிழித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் ஒற்றுமையை குலைப்பதாக தங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தங்களை துரோகிகளாக சித்தரிக்கின்றவர்கள், தங்களைத் தாங்களே சுய மதிப்பீடு செய்து பார்க்க வேண்டுமென்றும் அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *