ஐநா 46/1 தீர்மானத்தை அம்பிகை அம்மையார் வரவேற்றுள்ளமை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கும் துரோகம்

83

தமிழ் மக்கள் மீதான பொறுப்புக்கூறலுக்கு மிகப் பெரும் சவாலாக இருக்கக்கூடிய ஐநா 46/1 தீர்மானத்தை அம்பிகை அம்மையார் வரவேற்றுள்ளமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அம்பிகை செல்வகுமார் லண்டனில் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பித்த உணவுத் தவிர்ப்புப் போராட்டம், நேற்று 17 ஆவது நாளில் முடிவுக்கு வந்தது.

அம்பிகை செல்வகுமார் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை நிறைவு செய்யும் போது முன்வைத்த கருத்துக்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனங்களை வெளியிட்டுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு சிறிலங்காவை பாரப்படுத்தப்பட வேண்டும், சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்று வேண்டும், சிறிலங்கா தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் விசேட தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்மானிக்கும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பனவே அம்பிகையின் நான்கு அம்சக் கோரிக்கையாகும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அம்பிகையின் கோரிக்கைகளில் உடன்பட்டிருந்ததாகவும், அம்பிகை உணவுத் தவிர்ப்பை நிறைவு செய்யும் போது தெரிவித்த கருத்துக்கள் பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றுவதாக அமைந்துள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் பொறுப்புக்கூறலை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியே எடுத்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையின் ஊடாக பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று உறுப்பு நாடுகளிடம் தாம் வலியுறுத்தி வரும் நிலையில், அம்பிகை 46/1 தீர்மானத்தை வரவேற்றுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஐ.நா. பேரவையினுள் உள்ள சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் எதனையும் அடைந்துகொள்ளப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *