ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் குறித்து முடிவெடுக்க சிறிலங்கா அரசாங்கம் காலஅவகாசம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவில் நீதி, நல்லிணக்கம், மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை வலியுறுத்தி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில், புதிய தீர்மானம் ஒன்றைக் கொண்டு வர அனுசரணை நாடுகள் முடிவு செய்துள்ளன.
இந்த நிலையில் சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன், அனுசரணை நாடுகளின் தூதுவர்கள் நேற்று முன்தினம் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
பிரித்தானியா, கனடா, ஜேர்மனி ஆகிய நாடுகளின் தூதுவர்களே இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது, புதிதாக முன்வைக்கப்படவுள்ள தீர்மானம், சிறிலங்கா அரசுடன் இணைந்து, ஒருமித்த தீர்மானமாக முன்வைக்கப்படுவதன் அவசியத்தை, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரிப்பதாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, ஒருமித்த தீர்மானம் குறித்து முடிவெடுக்க காலஅவகாசம் தேவை என்று கூறியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.