முக்கிய செய்திகள்

“ஐ.நா.பொதுவாக்கெடுப்பு மூலம் வடகிழக்கில் சுயநிர்ணய உரிமையை அங்கீகரியுங்கள்”

158

வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளை ஐக்கிய நாடுகள் சபை வழிகாட்டலில் நடத்தப்படும் பொது வாக்கெடுப்பின் மூலம் அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் நாளான இன்று,  வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

“சிறிலங்காவின் வடக்கு, கிழக்கில் வாழும் ஈழத்தமிழ் அகதிகள் புலம்பெயர் தமிழர்கள் ஆகியோர் வாக்கெடுப்பில் அனுமதிக்கப்பட வேண்டும்.

சிறிலங்காவில் நடந்த தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகள் குறித்த சுயேச்சையான அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும்

சிறிலங்கா தீவின் வடக்கு, கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலத்திலிருந்து சிறிலங்கா இராணுவப் படைகள், சிங்கள நில ஆக்கிரமிப்பாளர்களை சிறிலங்கா அரசு உடனடியாக மீட்டுக் கொள்ள வேண்டும்.

பயங்கரவாத தடைச் சட்டம், பல்வேறு பாதுகாப்பு சட்டங்கள் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக நிபந்தனைகள் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.

சிறிலங்காவில் நடந்தது தமிழர்களுக்கெதிரான இன அழிப்பு நடவடிக்கை தான், எனவே, சிறிலங்காவுக்கான விசேட ஐ.நா அறிக்கையாளரை நியமிக்க வேண்டும், வடக்கு-கிழக்கு நிலவரத்தைக் கண்காணிக்கவும் மேம்படுத்தவும், உறுதுணையாகவும் இருக்க ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கள அலுவலகம் ஒன்றை வடக்கு- கிழக்கில் நிறுவ வேண்டும்.

சிறிலங்காவில் இடம்பெற்ற சித்திரவதைகள், வலிந்து காணாமலாக்கப்படுதல், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபட்டவர்களை சர்வதேச நியாயாதிக்க கொள்கைகளை பயன்படுத்தி விசாரணை செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பரிந்துரை செய்யவேண்டும்.” என்றும் அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *